முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனப் பேரணியாகவும் , வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர்.
காலை 11 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடரை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கொடுக்க, இறுதிப் போரின் தனது தாய் தந்தையை இழந்த, 14 வயதுச் சிறுமி ஒருவர் ஏற்றினார்.
இதையடுத்து. முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை, உறவுகளை இழந்தவர்கள் ஏற்றினர்.
உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நினைவுரையாற்றினார்.
அதையடுத்து, நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் கூடியிருந்தனர்.<