நள்ளிரவு காதல் கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மனைவி!

களியக்காவிளையை அடுத்த வயது28). வேன் டிரைவரான சர்ஜின் கேரளாவுக்குச் சென்று அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.

அப்போது அவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிபிதா(27) என்ற பெண்ணுக்கும், பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் சொந்த ஊரான தெங்குவிளையில் சர்ஜின் குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஏஞ்சல் சானியா என்ற குழந்தை உள்ளது.

சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவர் சர்ஜின் வேறு பெண்களுடனும் பேசிப் பழகுவதாக பிபிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதை அவர் கணவரிடம் கேட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார். அவரது உறவினர்கள் கணவன், மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த வைத்தனர்.

இந்த நிலையில் சர்ஜினின் தாயாரும், குழந்தை ஏஞ்சல் சானியாவும் கேரளாவில் ஒரு புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டனர்.

நேற்று நள்ளிரவு சர்ஜினின் வீட்டில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சர்ஜின் அலறியபடி கிடந்தார். அருகில் கையில் இரும்பு கம்பியுடன் அவரது மனைவி பிபிதா நின்று கொண்டிருந்தார்.

நள்ளிரவில் பிபிதா இரும்பு கம்பியால் கணவரின் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. கணவரின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

பொதுமக்களை பார்த்ததும் பிபிதா வீட்டில் இருந்து இரும்பு கம்பியுடன் வெளியில் ஓடினார். பிறகு வீட்டின் மாடியில் ஏறி நின்று கொண்டார்.

உடனே அவர் தப்பி சென்றுவிடாதபடி பொதுமக்கள் அவரது வீட்டை சுற்றி நின்றுகொண்டு அவரை சிறை பிடித்தனர். இது பற்றி களியாக்காவிளை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த சர்ஜினை காப்பாற்றி பாறசாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விடிய, விடிய பொதுமக்களால் சிறைவைக்கப்பட்ட பிபிதாவை போலீசார் மீட்டு போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவர் சர்ஜினுக்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு வரும். அவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்பார்.

அவருக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டதால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் அவரை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக பிபிதா தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பிபிதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.