‘கர்நாடகத்தில் பின்பற்றிய முறையைத் தங்களது மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்’ என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துப் போராடுவதற்கு கோவா, மணிப்பூர், மேகலயா மாநில காங்கிரஸார் முடிவுசெய்துள்ளனர்.
கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவில், பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளை வென்றது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கை அக்கட்சியிடம் இல்லை. இருப்பினும், அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக அம்மாநில வஜுபாய் வாலா தேர்வுசெய்தார். இதற்கு, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து டெல்லியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பளித்தால், கோவா, மணிப்பூர், மேகலாயா, பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆட்சி கலைக்கப்பட்டு, தனிப்பெரும்பான்மை கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இந்த நிலையில், அவர்களது கட்சிக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்கக்கோரி, காங்கிரஸைச் சேர்ந்த 16 கோவா மாநில எம்.எல்.ஏக்கள், ஆளுநர் மாளிகை முன்பு பேரணியாகச் செல்ல முடிவு எடுத்துள்ளனர். அதேபோல, மணிப்பூரிலும் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஆளுநரைச் சந்திக்க உள்ளார்.
அதேபோல, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தன் ட்விட்டர் பதிவில், ‘எங்களை ஏன் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை? இன்று ஒரு மணிக்கு, பீகார் ஆளுநரைச் சந்திக்க உள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.