எம்மில் பலரும் இன்று அலுவலகத்தில் பணியாற்றும் போதும் அல்லது வீட்டில் வேலை செய்யும் போதும் உடலுக்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுவதில்லை. குறிப்பாக முதுகு தண்டு வளையாமல் நேராக அமர்ந்து பணியாற்றுவதில்லை. அதனால் முதுகு வலி ஏற்படுகிறது.
முதுகு வலி என்றவுடன் பலரும் முதுகு வலி என்றால் அது சாதாரண முதுகு வலி என்று தான் நினைக்கிறார்கள். ஒன்றரை மாத முதுகு வலி, இரண்டரை மாத முதுகு வலி, ஐந்தாண்டுகளுக்கு மேலான முதுகு வலி என முதுகு வலி மூன்று வகைகளாக ஏற்படுகிறது. டிஸ்க் கம்ப்ரஷன் எனப்படும் முதுகு தண்டில் ஏற்படும் இறுக்கமான நிலையே அல்லது இயல்பற்ற நிலையே முதுகு வலிக்கு மூல காரணமாக அமைகிறது.
வெந்நீர் ஒத்தடம், ஐஸ் கியூப்பால் ஒத்தடம், வலி நிவாரணிகளை பயன்படுத்துவது, பெயின் ரிலீவர் களிம்புகளை தடவிக் கொள்வது அல்லது ஸ்பிரே அடித்துக் கொள்வது என முதுகு வலிக்கான தற்காலிக நிவாரணத்தைத்தான் நாம் முதலில் தெரிவு செய்கிறோம்.
ஆனால் முதுகு வலி வந்தால் பூரணமாக ஒய்வு எடுத்தால் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பவிடலாம். அது போல ஒய்வு எடுக்கும் போதும் மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றவேண்டும். மருத்துவர்கள் படுக்கை, தலையணை ஆகியவற்றைக் குறித்தும், பின் எப்படி படுக்கவேண்டும்? எப்படி எழுந்திருக்கவேண்டும்? எப்படி உட்காரவேண்டும்? என்பது குறித்தும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உடல் அமைப்பிற்கேற்ப வழிகாட்டுவர். அதனை உறுதியாக பின்பற்றவேண்டும். அதே போல் இயன்முறை மருத்துவர்கள் சொல்லும் உடற்பயிற்சியையும் இணைந்து மேற்கொண்டால் முதுகு வலியிலிருந்து குணமடையலாம்.
வைத்தியர் ராஜ்கண்ணா
தொகுப்பு அனுஷா