கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார்.
* கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, `கர்நாடக மக்கள் பா.ஜ.கவுக்கு 104 இடங்களை அளித்தார். மக்களின் பெரும்பான்மை ஆதரவு காங்கிரஸூக்கோ அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கோ இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தேன். மக்கள் எனக்கு அளித்த வரவேற்பையும், அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். மக்கள் எங்களுக்கு (பா.ஜ.கவுக்கு) 113 இடங்களை அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்றும். ஆட்சியை இழப்பதால் நான் எதையும் இழந்துவிட மாட்டேன். மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்’’ என்று உருக்கமாகப் பேசினார். அதன்பின்னர், முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார்.
* கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆளுநர் வாஜூபாய் வாலாவை முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநரை எடியூரப்பா சந்திப்பதற்கானக் காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், அவர் ராஜினாமா செய்ய இருப்பதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
*ஆனந்த் சிங்கைத் தொடர்ந்து பிரதாப் கௌடாவும், கோல்ட் பின்ச் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார்.
* நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே எடியூரப்பா பதவி விலகுவது உறுதி என கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `மாயமாகியிருந்த பிராதாப் கௌடா வந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்’ என்று தெரிவித்தார்.
*மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், கோல்ட் பின்ச் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். போலீஸாரின் விசாரணைக்குப் பின்னர் அவர் ஹோட்டலை விட்டு வெளியே வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணிக்க கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, முதலைமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யவும் எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாகவும் கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
* எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்புக்குப் பின்னர் அவை நடவடிக்கைகள் மதியம் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 193 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
* நம்பிக்கை வாக்கெடுப்பு சுமுகமாக நடைபெறும் பொருட்டு தலைமைச் செயலகம், எம். எல்.ஏ-க்களின் வீடுகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக டி.ஜி.பி. ராஜூ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பெங்களூரு கோல்ட் பின்ச் ஹோட்டலில் டி.ஜி.பி. ராஜூவே நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
* காங்கிரஸ் எம்.எல்-ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஹோட்டலில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 2 மணி நேரமே உள்ள நிலையில், இதுவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருவர் இருக்குமிடம் தெரியவில்லை.
* அவைக்கு வராத ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கௌடா ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருவரும் பா.ஜ.க எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டியின் பாதுகாப்பில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சோமசேகர் ரெட்டியும் அவைக்கு வந்து எம்.எல்.ஏவாகப் பதவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
* உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல், `சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசம் கேட்டது பா.ஜ.க. பின்னர் 7 நாள்கள் போதும் என்றது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் தாமதம் கூடாது என நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டோம் என்றார்.
* வெளிப்படைத் தன்மையை உறுதிப் படுத்தும் வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* எம்.எல்.ஏ-க்கள் மாயமானது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, `104 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று விடுவோம் என பா.ஜ.க கூறி வருகிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை. அவர்கள் அவைக்கு எப்போது வந்தாலும், எங்களுக்கே ஆதரவளிப்பார்கள் என்பது உறுதி’ என்றார்.
* தன்னைக் கடத்தி, கிரிமினல் கேஸ்களை வைத்து மிரட்டியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் குற்றம்சாட்டினார்.
* எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கௌடா அவைக்கு வரவில்லை. இதுகுறித்து விவரமறிந்தவர்கள் கூறுகையில், அவருடன் மேலும் 2 எம்.எல்.ஏ-க்களை, பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் பா.ஜ.க-வினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
* கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் தற்காலிக சபாநாயகர் போபையா முன்னிலையில் எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
* எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும் விதத்தில் இன்று காலை 10.30 மணியளவில் கர்நாடக சட்டப்பேரவை கூடியது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்குக் கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 222 தொகுதிகளுக்கு மட்டும் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 15-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை. பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வென்றனர். ஆட்சியமைக்கப் போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து பா.ஜ.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அதேநேரம், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கோரியது. இதனால், கர்நாடக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து, குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.கவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனால், கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா, பதவியேற்றுக்கொண்டார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா, இன்று மாலை 4 மணிக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு கூடாது என்று நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், பா.ஜ.க எம்.எல்.ஏ போபையாவைத் தற்காலிக சபாநாயகராக நியமித்த ஆளுநரின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.