இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானோருக்கு ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பலமுறை திட்டமிட்டாலும் என்னவோ அதற்கான நேரம் மட்டும் கைகூடி வருவதேயில்லை.
விளைவு ஒபீசிட்டி, சர்க்கரை நோய் இப்படி அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் நம் உடலை பாதிக்கிறது. இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கட்டுரையை அவசியம் படித்திடுங்கள்.
கொழுப்பினை கரைக்க நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.நீங்கள் கவனக்குறைவாக செய்கிற சின்ன சின்ன தவறுகள் தான் உடலில் கொழுப்பு சேர தொடர்ந்து சேர காரணமாகிடுகிறது.
தெரிந்து கொள்ளுங்கள் :
உங்கள் உடலில் அதிகப்படியாக இருக்ககூடிய கெட்ட கொழுப்பினை நீங்கள் பத்து சதவீதம் வரை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய் பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காக்கும்.
அதற்காக கொழுப்பைக் கரைக்க மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று அவசியமல்ல உங்களுடைய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதுமானது.
கவனம் :
நீங்கள் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் வைத்திடுங்கள். தொடர்ந்து ஒரு நாளின் மூன்று வேலை உணவும் ஒரே மாதிரியான உணவாக இருக்கிறதா? கொழுப்பு நிறைந்த உணவா? என்பதை கவனியுங்கள்.
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறீர்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ், எனர்ஜி டிரிங்க்ஸ் ஆகியவை எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதை பாருங்கள். நீங்கள் ஒவ்வொன்றையும் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டாலே கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
காய்கறி மற்றும் பழங்கள் :
கொழுப்பு நிறைந்த உணவுகள், மாவுப் பொருட்கள் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.மாவுச் சத்து நிரம்பிய காயை தவிர்த்திட வேண்டும்.
இவற்றில் அதிகப்படியான ஃபைபர் இருக்கும் என்பதால் அவை உங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவிடும்.
கொழுப்பு உணவுகள் என்று சொல்லி எல்லாவற்றையும் தவிர்த்திட முடியாது. கொழுப்பும் உங்கள் உடலின் சீரான இயக்கத்திற்கு அவசியம். கொழுப்பு வகைகளில் இருக்கக்கூடிய சாச்சுரேட்டட் ஃபேட் தான் உங்களுடைய எதிரி.
ஆம், இது இதயத்திற்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும். வெண்ணைய், எண்ணெய், க்ரீம், கறி போன்ற உணவுகளில் இந்த கொழுப்பு அதிகமிருக்கும். அதனால் தான் எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.
ட்ரான்ஸ் ஃபேட் :
நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பில் இன்னொரு வகை இது. நீங்கள் வாங்கும் பாக்கெட் உணவுப் பொருட்களில் ட்ரான்ஸ் ஃபேட் அல்லது ஹைட்ரோஜெனடேட் ஃபேட் என்று குறிப்பிட்டிருந்தால் அதுவும் ட்ரான்ஸ் ஃபேட்டினைத் தான் குறிக்கிறது.
இந்த வகை உணவினையும் நீங்கள் தவிர்ப்பது தான் நல்லது ஏனென்றால் இது வெறும் கெட்டக் கொழுப்பினை அதிகரிப்பதுடன் உடலில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பினையும் குறைக்கிறது.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் :
இது இதயத்திற்கு மிகவும் நன்மை ஏற்படுத்துகிற ஒரு வகை கொழுப்பு. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்திடும். சால்மன் மீன் வகைகளில் இது அதிகமாக இருக்கிறது.
இந்த வகை கொழுப்பு என்று சொன்னதுமே மூன்று வேலை உணவையும் ஃபேட்டி ஆசிட் நிரம்பிய உணவுகளையே தொடர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. இதிலும் அளவு மிகவும் முக்கியம். தொடர்ந்து எடுக்கும் பட்சத்தில் அவையே உங்கள் உடலுக்கு எதிரியாய் முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக உடல் எடை அதிகரிப்பதுடன் ரத்த கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும் என்பதால் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கொழுப்பு அதிகரிப்பதினால் இதய நோய் மட்டுமல்ல டைப் 2 டயப்பட்டீஸ், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படக்கூடும்.
ப்ரோட்டீன் :
கொழுப்பினை கரைக்க ப்ரோட்டீன் அவசியம். நீங்கள் எடுக்கிற ப்ரோட்டீன் அசைவ உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய ப்ரோட்டீனை விட சைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய ப்ரோட்டீனாக இருந்தால் நல்லது.
அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய ப்ரோட்டீன் தொடர்ந்து எடுத்து வர அது உங்கள் உடலில் கொழுப்பினை அதிகரிக்கும். இதே சைவ உணவுகளிலிருந்து வரக்கூடிய ப்ரோட்டீன் என்று சொன்னால் அது உடலில் இருக்கக்கூடிய அதிகபட்ச கொழுப்பினை கரைத்திடும்.
மாவு :
நம் நாட்டில் அதிகப்படியாக சாப்பிடக்கூடியது ,அரிசி,கோதுமை, பிரட் போன்ற மாவுப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். கூடவே சர்க்கரை, எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள நம் உடலில் சேருகிற கொழுப்பினைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
இதனை அவசியம் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக முழு தானியங்களை சாப்பிடலாம். இவை எல் டி எல் கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் இதயத்திற்கும் நல்லது.
ரொம்ப முக்கியம் :
என்ன தான் சாப்பிடும் உணவுகளை பார்த்து பார்த்து திட்டமிட்டு வகை படுத்தி,முறையாக டயட் பின்பற்றினாலும் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது,கடைபிடிக்க வேண்டியது இதனைத் தான்.
உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்று சொன்னதுமே ஜிம்மில் வியர்வை ஒழுக பயிற்சி செய்வதாய் நினைத்துக் கொள்ள வேண்டாம். காலையில் சிறிது நேரம் வாக்கிங், வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய சின்ன சின்ன உடற்பயிற்சிகள் கூட அவசியமானது தான். நாள் முழுவதும் உட்கார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் குறைந்தது ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.
இது கொழுப்பினை கரைக்க மட்டுமல்லாமல் உடலுக்கு சிறந்த ஸ்ட்ரச்சிங் பயிற்சியாகவும் இருக்கும். தீடிரென்று ஏற்படுகிற சுளுக்கு, கை கால் வலி ஆகியவை ஏற்படாமலிருக்கவும் இது உதவிடுகிறது.