கருத்தரித்த நிலையில் அருகருகே உயிரிழந்து தொங்கிய நிலையில் காதல் ஜோடியின் சடலங்கள் சனிக்கிழமை 19.05.2018 மீட்கப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
திகிலிவெட்டை எனும் ஒதுக்குப் புறமான வயல்வெளிக் கிரமத்தின் முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த தங்கவடிவேல் தினேஷ்குமார் (வயது 22), மற்றும் நூலகர் வீதியைச் சேர்ந்த நாகராஜா நிரோஜினி (வயது 23) ஆகிய இருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டன.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோராவெளி – நாவலடி ஊற்று பகுதியில் நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிளொன்று அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்த அந்தக் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருவர் அப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அங்கு வந்த எவராவது காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரதேச சபை உறுப்பினருக்கு அழைப்பை ஏற்படுத்தி விவரத்தைத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பிரதேச சபை உறுப்பினரும் கிராம வாசிகளும் ஆடு மேய்க்கும் பெண்ணுமாக இணைந்து பற்றைக் காடுகளடர்ந்த பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது மேற்படி காதல் ஜோடி மரமொன்றில் ஒரே கயிற்றில் சடலமாகத் தொங்கியபடி காணப்பட்டுள்ளனர்.
காதலர்களாக இவ்விரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ள அதேவேளை காதலி 5 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
எனினும், திருமணம் செய்து கொள்வதற்காக தங்களின் பெற்றோரின் அங்கீகாரம் உடனடியாகக் கிடைக்கப்பெறாத விரக்தியுற்ற நிலையில் இந்த காதல் ஜோடி தற்கொலை செய்து தமது உயிர்களை மாய்த்துக் கொண்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டபின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சமீப ஆண்டுகளில் கர்ப்பிணியாக உள்ள நிலையில் காதல் ஜோடி தூக்கில் தொங்கியபடி ஒரே கயிற்றில் தங்களை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றிருப்பது இதுவே முதற் தடவையாகும் என பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.