கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சந்தித்து வருகிறார். முன்னதாக மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார். பிறகு இளைஞரணி நிர்வாகிகளைச் சந்தித்தார். அதன் வரிசையில் இன்று மக்கள் மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். ரஜினி மக்கள் மன்றத்துக்குத் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது. பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் நாடுகள் கண்டிப்பாக வளர்ச்சியடையும். அதன் படி என் மக்கள் மன்றத்திலும் நான் தொடங்க உள்ள கட்சியிலும் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்துச் செயல்களிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.” எனக் கூறினார்.
பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து ரஜினி பேசினார். 150 தொகுதிகளில் உங்களுக்கு ஆதரவு உள்ளதாக ஒரு பத்திரிகை எழுதியுள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அப்படி இருப்பது உண்மை என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனக் கூறினார். தொடர்ந்து “கர்நாடகாவில் நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, எடியூரப்பா பதவி விலகல் மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த விசயத்தில் உச்சநீதிமன்றத்தைத் தான் பாராட்ட வேண்டும். உரிய நேரத்தில் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதுக்குத் தலை வணங்க வேண்டும்.கர்நாடக ஆளுநர், பாஜக தங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்தான செயல்.” எனக் தெரிவித்தார்.
காவிரி தொடர்பான கேள்விக்கு, “ காவிரி விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாராக இருந்தாலும் மதித்து தான் ஆக வேண்டும். காவிரி விவகாரம் ஆணையத்தின் கீழ் வரவேண்டும். கமலின் அனைத்துச் கட்சி கூட்டத்தில் பங்கேற்க நான் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்காகப் போராட பல விசயங்கள் உள்ளது, அப்போது இணைந்து ஆலோசனை நடத்திக்கொள்ளலாம். கட்சி தொடங்கிய உடன் தான் கூட்டணி பற்றி யோசிக்க முடியும். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து விதத்திலும் நாங்கள் தயாராக இருப்போம்.” எனக் கூறினார்.