என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது மங்கள சமரவீரவுக்கும், என்னை விமர்சிக்கும் நபர்களுக்கும் நன்றாக தெரியும். அவ்வாறு தெரிந்தே எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்வைக்கின்றனர். அன்று ரணிலை வீழ்த்த பொய்களை கூறியவர்கள் இன்று என்னை வீழ்த்தவும் அதே பொய்களை கூறுகின்றனர். ஆனால் நான் சாதித்துகாட்டுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாம் ஒருபோதும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் போராடவில்லை. பயங்கரவாதிகளுடன் மட்டுமே போராடினோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை முதன்மைப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வியத்மக வேலைத்திட்டத்தில் நேற்று முன்தினம் பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பின்னர் நாம் வடக்கு கிழக்கில் முன்னெடுத்த அபிவிருத்திகள் குறித்து எவரும் வாய் திறப்பதில்லை. நாம் யாரையும் விமர்சித்து செயற்படவில்லை. எமக்கு ஒரு சவால் இருந்தது. அதனை எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை நாம் அறிந்துகொண்டோம். அதை விடுத்து நாம் எதிர்க்கட்சியை விமர்சித்துக்கொண்டு காலத்தை கடத்தவில்லை. எம்முடன் சரியாக செயற்படக்கூடிய அணி இருந்தது. இன்றும் அவ்வணி எம்முடன் உள்ளது. அவர்களை கொண்டு நாட்டினை சரியான பாதையில் கொண்டு செல்லவே வியத்மக அமைப்பினை உருவாக்கியுள்ளோம்.
அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் கொள்கையை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் குழப்பங்கள் என்ன என்பதை அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் கொள்கையை இப்போதே உருவாக்கிக்கொண்டு அதன் பின்னர் அதிகாரத்தில் இருக்கும் போது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையின் கல்வி முறைமை, இளைஞர்களுக்கான வேலைத்திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற சிந்தனைகள் எம்மிடம் உள்ளன.
இந்த நாட்டில் நாம் ஏற்படுத்திக்கொடுத்த அபிவிருத்தி பயணங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலில் உள்ளது. நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் தேசிய பாதுகாப்பு பலமடைய வேண்டும். நாட்டின் உறுதியான பாதுகாப்பு கொள்கை இல்லாவிட்டால், தேசிய பாதுகாப்பு பலவீனமாக இருந்தால் எந்தவொரு சர்வதேச முதலீடுகளும் இலங்கைக்கு வரப்போவதில்லை. இன்று கொழும்பில் உள்ள பாரிய நிறுவனங்களை முதலீட்டாளர்களை நாட்டுக்கு நானே கொண்டுவந்தேன். நான் பாதுகாப்பு செயலாளர் என்ற பொறுப்பின் கீழேயே இவை அனைத்தும் நாட்டிற்கு கொண்டுவந்தேன்.
நான் நேரடியாக தலையிட்ட இந்த நாட்டிற்கு பல்வேறு முதலீட்டாளர்களை அழைத்து வந்தேன். இன்று நாட்டில் ஒரு புதிய முதலீட்டாளர்களும் வருவதாக தெரியவில்லை. ஏனெனில் இவர்களுக்கு முதலீட்டாளர்களை தெரிவுசெய்ய முடியவில்லை. மேலும் நாம் கொழும்பில் உருவாக்கி கொடுத்த அடுக்குமாடி வீடுகள் அனைத்தையும் கடந்த மூண்டு ஆண்டுகளில் தாம் நிர்மாணித்ததாக கூறி விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு பலன் கிடைத்ததா என்பதை மக்களிடம் கேட்க வேண்டும்.
மேலும் கடந்த காலங்களில் நானே வெள்ளை வான் கடத்தல் கலாசாரங்களை உருவாக்கியதாக கூறுகின்றனர். மங்கள சமரவீர இவ்வாறான கருத்துக்களை கூறுகின்றார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்களைக்கொண்டு மங்கள சமரவீர போன்றவர்கள் அப்போது எலும்புகளை தேடி எடுக்கும் பணிகளை முன்னெடுத்தனர். அவை இன்றும் எனக்கு நினைவில் உள்ளன. அப்படியாயின் ஐக்கிய தேசியக் கட்சியில் யார் வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியது? அதற்கும் மங்கள சமரவீர பதில் கூறவேண்டும். நாம் ஒருபோதும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் போராடவில்லை, நாம் பயங்கரவாதிகளுடன் மாத்திரமே போராடினோம். இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தலாக இருந்த பொதுமக்களை பாதித்த பயங்கரவாத அமைப்புடனே நாம் போராட்டம் நடத்தினோம். மாறாக அப்பாவி மக்களை ஒருநாளும் நாம் தண்டிக்கவில்லை. அப்பாவி தமிழ் மக்களை தோற்கடிக்கவும் இல்லை.
கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து காணாமல்போன ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வினவியுள்ளார். அதற்கு உரிய அமைச்சர் பூச்சியம் என்ற பதிலை தெரிவித்துள்ளார். ஆகவே சில உண்மைகளை அரசாங்கமே கூறுகின்றது. ஆனால் பொய்யான கதைகளை கூறி எனது பயணத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர். இன்று மங்கள சமரவீர என்னைப் பற்றிய பல விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ‘ரணிலால் முடியாது ” என்ற போஸ்டர்களை நாடு பூராகவும் ஓட்டினார்.
இப்போது ஒரு சில தினங்களுக்கு முன்னர் அதற்கான விளக்கத்தை கொடுத்திருந்தார். ரணிலால் முடியும் என்று தெரிந்தே அவரது பயணத்தை தடுக்க பொய்யான பிரச்சாரம் செய்ததாக கூறுகின்றார். அதேபோல் என்னாலும் மாற்றத்தை செய்துகாட்ட முடியும் என்பது தெரிந்தே மங்கள சமரவீர பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றார். என்னால் செய்துகாட்ட முடியும் என்பது இவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால் பொய்களை கூறுகின்றனர். ஆனால் மக்கள் பொய்களை நம்பப் போவதில்லை. அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் வேண்டும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றனர். எம்மால் இந்த நாட்டினை மீட்டுக்க முடியும். எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நாட்டினை கட்டியெழுப்புவோம், அதற்கு மக்கள் எம்முடன் கைகோருங்கள்.