வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு மிகவும் ஆபத்தான சூழலையே வடக்கு மாகாண சபை உருவாக்கியுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பிற்கு முரணாக செயற்படும் வடக்கு மாகாண சபையினை காலதாமதமின்றி கலைத்துவிட வேண்டும்.
வடக்கு மாகண கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தேசிய அரசாங்கத்தின் நிர்வாக பலவீனத்தின் காரணமாகவே வடக்கு மாகாணத்தில் தற்போது தான்தோன்றித்தனமான நிர்வாகம் இடம்பெற்று வருகின்றது.
பொதுவான தேசிய சட்டத்திற்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் செயற்படுகின்றனர்.
அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றது. அரசாங்கத்தின் அனுமதியுடனா இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்றது என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவோம் இது வடக்கு மாகாணத்தின் விவகாரம் இதில் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளமையினை வடக்கு மாகாண உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது.
நாட்டை பிரிக்கும் நோக்கிலே விடுதலை புலிகள் அன்று ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.
இவர்களின் நிலைப்பாட்டிலே இன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். நாட்டை பிரித்து விடுதலைப் புலிகளின் கனவினை நிறைவேற்றுவதே இவர்களின் நோக்கம்.
அரசாங்கமும் இதற்கு அனுமதி வழங்கும் நோக்கிலே நிர்வாகங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றது. நாடு பிரிக்கப்பட்டால் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாகுவதற்கு கூட்டு எதிரணி ஒரு போதும் அனுமதி வழங்காது. வீண் விடயங்களுக்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தாமல் .
வடக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கூட்டு எதிரணியினர் தமது ஆதரவினை வழங்குவார்கள். சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கம் என்பது வெறும் பகல் கனவு மாத்திரமே என தெரிவித்தார்.