ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில்7 பேர் பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாள்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, டி.ஐ.ஜி., கபில் குமார் சாரட்கர் தலைமையில், 3 மாவட்டப் போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால், போலீஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசியபோதிலும், கலைந்து செல்லாத கூட்டத்தினர், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தே சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள், அலுவலக முகப்பில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அதோடு, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தினர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருப்பதால், தூத்துக்குடியில் பதற்றம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, போலீஸார் தாக்கியதிலும் துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல் துறையினரும் காயம் அடைந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 200 இருசக்கர வாகனங்கள், 20 துறைகள் சம்பந்தப்பட்ட வாகனங்களை எரித்த போராட்டக்காரர்கள், அருகில் இருந்த ஸ்டெர்லைட் குடியிருப்பில் புகுந்தனர்.
அங்கிருந்த வாகனங்களை அவர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுவரைக்கும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் ஒரு பெண், மூன்று வாலிபர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரின் பெயர் அந்தோணி என தெரியவந்துள்ளது. பலர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை உயரும் என்ற அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில், போராட்டக்காரர் 7 பேர் பலியானதால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.