“வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக் கூறுவதில் ஜனாதிபதி மைத்திரிக்கு வெட்கம் இல்லையா?” என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஐ.நா. தீர்மான விவகாரங்களுடன் அதிக ஈடுபாடுடைய ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
“ஐ.நா. தீர்மானத்தில் போர்க்குற்றம் தொடர்பில் எதுவுமே இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதானது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோன்று இருக்கின்றது. அந்தத் தீர்மானத்தை எடுத்து வாசித்துப் பார்த்தால் உண்மை தெரியவரும்.
சில ஊடகங்களும் இனவாத அமைப்புகளும் தவறாக குறிப்பிடுவதைப்போன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளிலும் எமது பாதுகாப்புப் படையினர் மீது போர்க் குற்றங்கள் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவ தினத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஆர்வலர்களும் தெரிவித்ததாவது:-
“2014ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அமைவாகவே, 30/1 தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதைச் சமர்ப்பித்து 2015-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத ஐ.நா. அமர்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதையும், இரு தரப்பும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தெரிவிக்கும் கருத்துகள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகவே இருக்கின்றது. ஐ.நா. தீர்மானத்தில், கூறப்பட்ட சர்வதேச நீதிபதிகள் விடயத்தை ஜனாதிபதி முதலில் மறுத்தார். உள்நாட்டு விசாரணை நடத்துகின்றோம் என்றார். அவர் இப்படித் தெரிவித்ததே இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதையே வெளிக்காட்டுகின்றது. மறுபுறம், சிங்கள பௌத்த வாக்குகளுக்காக போர்க்குற்றம் நடக்கவில்லை என்கிறார். இவரின் இரட்டை வேடத்தால் முதுகெலும்புள்ள தலைவராக இல்லாமையால், இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எதுவுமே செய்யமுடியவில்லை.
வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று கூறுவதில் ஜனாதிபதி மைத்திரிக்கு வெட்கம் இல்லையா?
கடந்த ஆட்சியாளர் ராஜபக்ஷ, ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களைப் பொய் என்று வாதத்தை முன்வைத்தார். தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை மறுத்தாரே தவிர, அதில் இருக்கின்ற விடயத்தை இல்லை என்று கூறவில்லை. ஜனாதிபதியின் இந்தக் கருத்து பொறுப்புக்கூறல் தொடர்பில் உலக அரங்கில் மோசமான விளைவையே ஏற்படுத்தும்” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.