முசலி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட சிலர் விமர்சித்து கதைத்தமையினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
முசலி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மாலை முசலி பிரதேச செயலகத்தில் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறித்த கூட்டத்தில் முசலி பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய காணி விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் போது முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மற்றும் முசலி பிரதேச செயலக ஊழியர்கள் சிலரை அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முசலி பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் அப்பிரதேச மக்கள் சிலர் விமர்சனம் செய்து அவர்களை அவமதிக்கும் வகையில் குறித்த கூட்டத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் ரீதியாக அவர் ஆதரவு வழங்கவில்லை என்பதனை அடிப்படையாகக் கொண்டே அவரை விமர்சித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டது.
அரச திணைக்கள அதிகாரிகளை பொது மக்கள் மத்தியில் விமர்சித்து அவர்களின் கடமைக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது.
எனவே அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்கள் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மற்றும் முசலி பிரதேச செயலக ஊழியர்கள் சிலரை விமர்சனம் செய்து அவர்களை அவமதிக்கும் வகையில் கதைத்தமையினை வன்மையாக கண்டிக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.