வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி வருவதால் அமெரிக்காவை மிரட்டும் நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டு வந்தது.
அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாகவும் ஏவுகணைகளை வீசப் போவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அடிக்கடி எச்சரித்து வந்தார்.
மேலும் அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனையும் அடிக்கடி நடத்தப்பட்டு வந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலை நிலவி வந்தது.
பதட்டத்தை தணிக்கும் வகையில் சீனா வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதையடுத்து வடகொரியா இறங்கி வந்தது. தென் கொரியா, வட கொரியா அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.
பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தென் கொரியாவில் சுற்றுப் பயணம் செய்து அந்த நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசுவதாக உள்ளது.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு எதிராக கிம் ஜாங் அன் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வட கொரியா அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பேச்சுவார்த்தையின் விதிமுறைகள் விதிமுறைகளுக்கு ஏற்றார் போல் கிம் ஜாங் அன் நடந்து கொள்ள வேண்டும்.
அவர் பேச்சு வார்த்தையின் போது கிம் ஜாங் அன் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டால் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறி விடுவார். பேச்சுவார்த்தை தடை படும். இது, இரு நாட்டு உறவை மேலும் பாதிக்க செய்து விடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.