நடைப்பயிற்சி அனைவராலும் செய்யமுடிந்த எளிமையான பயிற்சி. இதயம், நுரையீரலை வலுப்படுத்தவும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தவிர்க்கவும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். நடைப்பயிற்சி என்றதும் முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும்.அதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
‘முன்னோக்கி நடப்பதைவிடப் பின்னோக்கி நடப்பதில் அதிக நன்மைகள் இருக்கின்றன. இது பல்வேறு ஆராய்ச்சிகளின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது” என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன்.
பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை அவர் விளக்குகிறார்.பின்னோக்கி நடப்பதால் நம் உடலின் சமநிலை மேம்படுகிறது. நடைப்பயிற்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.முன்னோக்கி நடப்பதைவிடப் பின்னோக்கி நடக்கும்போது காலை வீசி நடக்கும் அளவு (stride length cadence) குறைவாக இருக்கும். இதனால் தசைகள் வலுவடையும். மூட்டு மற்றும் கணுக்கால் தசைகள் வலுவடையும். தொடைக்குப் பின்னால் உள்ள தசை நார்கள் சீராக இயங்க உதவும். முதுகுவலியைக் குறைக்கும். மூளையின் செயல்திறனை (Cognitive Control) மேம்படுத்தும்.
உடல் எடையைக் குறைக்க உதவும். தினமும் 15 நிமிடம் வாரத்தில் நான்கு நாள்கள் நான்கு வாரம் தொடர்ந்து செய்தால், இதற்கான பலன்களை அடையலாம். சில உடல்நல பாதிப்புகள் உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.”
யார் பின்னோக்கி நடக்கக் கூடாது?
நரம்புக்கோளாறு உள்ளவர்கள்.
முன்னோக்கி நடக்கவே சிரமப்படுபவர்கள்.
அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் (சில நாள்களுக்கு)
கவனம் அவசியம்: பின்னோக்கி நடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டு மட்டுமே, இந்தப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ஏராளமான ஆபத்துகள் ஏற்படவும் அதிகம் வாய்ப்புள்ளது.