2018 மார்ச் 24 முதல் தூத்துக்குடியில் போராட கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களின் எண்ணிக்கை, அவர்களின் உணர்ச்சிபூர்வ கோஷம், எதிர்ப்பின் வெளிப்பாடு, ஆகியவற்றை பார்த்து மத்திய மாநில அரசுகள் மட்டுமல்ல, தேசிய மற்றும் சர்வதேச பெருமுதலாளிகளின் குழுமங்களே கொஞ்சம் அறண்டு ஆட்டம்கண்டு போயிருக்கும். ஒரு சின்ன வன்முறை தீக்குச்சியை அங்கு யாரேனும் பத்த வைத்திருந்தால், ஒட்டுமொத்த ஆலையும் சுற்றுவட்டாரமும் எரிந்து அழிந்து போயிருக்கும்; கூடவே ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டமும்.
ஆனாலும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கட்டுப்பாடான பள்ளிக்கூட மாணவர்கள்போல் நடந்து கொள்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
#ஏன் எந்த போராட்டம்..?
இது ஒரு சமூகத்தின் வாழ்வா சாவா போராட்டம். அடுத்த தலைமுறை சிதைந்தும் அழிந்தும் போகாமல் காப்பாற்ற, மனிதநேயமும் சமூக அக்கரையும் உள்ள அனைவரும் இணைந்து போராடும் போராட்டம்.
போராட்டத்துக்கு முந்தைய, மார்ச் 23-ம் தியதி தூத்துக்குடி மக்கள் கண் விழித்தபோது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை, நச்சு கலந்த கந்தக காற்று காரணமாக கண்களை கசக்கிக்கொண்டே இருக்கப்போகிறோம் என்று. முதலில் அது ஏனென்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடிய மக்கள், அந்த கந்தக காற்று ஸ்டெர்லைட் ஆலையிலிருந்த வருகிறது என்ற உண்மையை அறிந்தபோது கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்க, ஒரே நாளில், எந்த முக்கிய ஊடக பின்புலமும் இல்லாமல் கூட்டிய கூட்டம்தான் இந்த மகத்தான மக்கள் போராட்டம். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
#வரலாற்று பின்னணி
குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளே நுழையவே அனுமதி மறுத்த இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு 1992-ல் ரத்தினகிரி என்ற அழகான கடரோர நகரத்தில் 500 ஏக்கர் இடமும் கொடுத்து வருடத்துக்கு 60,000 டண் செம்பு சுத்திகரித்தெடுக்க அனுமதியும் கொடுத்தது மஹாராஷ்டிர அரசு. எழுத்துபூர்வமான உத்தரவு கிடைத்ததும் தன் கட்டுமான பணிகளை துவங்கியது ஆலை நிர்வாகம். கொதித்தெழுந்த மக்களின் அடுக்கான தொடர் போராட்டங்களால் கலகலத்துப்போன அரசும் கார்பரேட்டும் தம் திட்டத்தை தூக்கி 1993-ல் பரணில் போட்டன.
இப்படி அனைவருமே துரத்தியடித்த, சுற்றுப்புற சூழலுக்கும் மக்கள் ஆரோகியத்துக்கும் ஆபத்தை உருவாக்கும் ஆலைக்கு சிகப்பு கண்பளம் வீசி வரவேற்றது – தமிழகம்.
1995 ஆகஸ்ட் 1-ல் (Tamil Nadu Pollution Control Board -TNPCB) தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் நிறுவுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சான்று வழங்கியது. மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சான்றிதழ் உடனடியாக வாங்குமாறு அன்போடு பணித்தது Environmental Impact Assessment (EIA) .
ஆனால் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சான்றிதழ் (EIA) வாங்கும் முன்னரே தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் (Ministry of Environment and Forests) முந்திரிக்கொட்டையாய் முந்திக்கொண்டு 1995 ஜனவரி 16 அன்று “தொழில் துவங்கலாம்” என்று சான்றிதழ் வழங்கியது. அந்த அளவுக்கு பணம் விளையாடி இருக்கிறது. அன்று துவங்கியது இந்த பிரச்சினை.
லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடிய இந்த பேரத்தில் ஆரம்பம் முதலே எந்த சட்ட விதியும் சரியாக கடைபிடிக்கப்படவில்லை. உதாரணமாக: மன்னார் வளைகுடாவில் (Gulf of Mannar) இருந்து 25 கிலோமீட்டருக்கு அப்பால்தான் ஆலை கட்டப்படவேண்டுமென்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் எழுத்து மூலமாக சொல்லியும் மன்னார் வளைகுடாவில் இருந்து 14 கிலோமீட்டருக்கு உள்ளேயே ஆலை கட்டப்பட்டுள்ளது, தம் திரவ கழிவுகளை எளிதில் கடலில் கலப்பதற்காக. வருடத்துக்கு 400,000 டன் என்றளவில் தோராயமாய் தினமும் 1,200 டன் நச்சு கழிவுகளை வெளித்தள்ளுகிறது இந்த ராட்சத ஆலை.
ஒன்றல்ல இரண்டல்ல, எதனையோ மரணங்கள் சம்பவித்துள்ளன இந்த ஆலையின் விஷ வாயு கசிவால். நிலத்தடி நீர் வறண்டதோடு மட்டுமல்லாமல் அமிலம் மற்றும் பல்வேறு விஷ கழிவுகள் நீரில் கலந்து, கால்நடைகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியாய்…
#நிறுவனர் யார்..?
1954ல் பிறந்த, தன்னை ஒரு அதீத கடவுள் நம்பிக்கையாளர் என்று பெருமையோடு கூறிக்கொள்ளும் அனில் அகர்வால் தான் இதன் முதலாளி. பீகார் மாநிலத்தில் பிறந்து, தற்போது லண்டனில் வாழ்கிறார் இவர். தன் 15 வது வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு உலோக குப்பைகள் வாங்கி விற்க துவங்கிய இவரின் இன்றைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடிகளுக்கு மேல். லண்டனை தலைமையாக கொண்ட “வேதாந்தா வளங்கள் நிறுவனம்” தான் (Vedanta Resources Plc ) இவருடைய உலோக சாம்ராஜ்யத்தின் கார்பரேட் பெயர். தன் பக்தியை கம்பேனியின் பெயரிலேயே காட்டுகிறார் அனில் அகர்வால்.
சென்ற 20 ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆலை சுரண்டியுள்ள இந்திய இயற்கை வளங்களின் மதிப்பை கணக்கிட்டு மயங்கி விழ, இதன் ஆண்டு வருமானத்தை பாருங்கள். கணக்கில் காட்டபட்டுள்ள வருமானம் மட்டுமே ஆண்டுக்கு சராசரி 30 ஆயிரம் கோடிகள். தன் அரசியல் பலத்தை பயன்படுத்தியும் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டும் இந்திய வளங்களை சூறையாடுவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அனில் அகர்வால். சமீபத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை தன் வாயாலேயே கூறியுள்ளார்
“India is an amazing opportunity, if you think about it, there is nobody here as my competitor in tapping the nation’s resources and I want to exploit the market as best as I could’’ – Financial Times
#கோர்ட்டும் கேசும்
1998 நவம்பர் 23-ல் சென்னை உயர்நீதி மன்றத்தால் ஒரு சம்மட்டியடி தீற்பின் மூலம் இழுத்து மூடப்பட்ட இந்த ஆலை, வெறும் ஒரே வாரத்தில் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்தே இவரில் பணபலமும் அதிகாரபலமும் புரியும். நாக்பூரில் உள்ள சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், National Environmental Engineering Research Institute (NEERI) பரிந்துரைத்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த முடிவை எடுத்தது.
அந்த அறிக்கைக்கு எதிராக அவர்களையே வைத்து மறுப்பு தெரிவிக்க வைத்தது ஸ்டெர்லைட். அதர்க்கு பதிலுதவியாய் அதே NEERI நிறுவனத்துக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஒன்றரை கோடிக்கு கான்ட்ராக்ட் வேலைகள் கிடைக்கின்றது இதே ஆலை மூலமாக. என்ன ஒரு முதலாளித்துவ ஆணவ அப்பட்டமான அதுமீறல் .
இதே கதை மீண்டும் நடந்தது 2010 செப்டம்பர் 28-ல். சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறை மீறல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிட்டது. ஆனால் வெறும் மூன்றே நாட்களில் தில்லி உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆலையை திறக்க அனுமதி அளித்தது. அழிவு சக்திகளோடு கைகோர்த்து உடன்பட்டு போவதில் சில நீதிமன்றங்களுக்கு என்ன ஒரு வேகம்…
#இதுவரையான போராட்டங்கள்..?
இந்த நச்சு ஆலை துவங்கப்பட்ட 1996 ஆம் ஆண்டிலிருந்தே உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
1997 மே 5 ஆம் தியதி இந்த ஆலைக்கு அருகே அமைந்திருந்த ரமேஷ் பூக்கள் என்ற நிறுவனத்தின் தொழிலாளிகள் வாயு கசிவால் மயக்கமுற்று விழுந்ததுதான் முதல் அதிகாரபூர்வ புகார்.
அதே 1997 ஆகஸ்டு 20 ல் ஆலைக்கு எதிரே அமைந்திருந்த தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலர்கள் நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மயக்கம் மற்றும் வாந்தியும் TNEB இன் புகாராக இன்னும் இருக்கிறது.
ஒவ்வொரு முறை புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டபோதும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலைக்கு வக்காலத்து வாங்கி “நீரோ காற்றோ மாசுபடவே இல்லை” என்று சான்றளித்திருக்கிறது.
2000 வது ஆண்டில் ஏற்பட்ட நவம்பர் – டிசம்பர் மாத தொடர் மழையின்போது ஸ்டெர்லைட் ஆலையின் திரவ நச்சு மழை நீரோடு கலந்து மேலவிட்டம், செல்வர்புரம் நீர்நிலைகளில் நச்சுத்தன்மை படர்ந்து பலத்த சீர்கேடுகளை ஏற்படுத்தியது. மக்கள் எவ்வளவோ போராடினர்… எல்லாமே “செவிடன் காதில் ஊதிய சங்காய்” போனது.
2004 செப்டம்பர் 21 ஆம் தியதி உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு இந்த ஆலை விண்ணப்பித்திருந்த உற்பத்தி விரிவாக்க (ஆன்டுக்கு 300,000 டன்) கோரிக்கையை முற்றாக புறக்கணித்ததோடு தற்போதுள்ள உற்பத்தி அளவுக்கு தகுந்த மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளே எடுக்கப்படவில்லை என்று இடித்துரைத்தது.
என்ன ஆச்சரியம், அடுத்தநாளே 2004 செப்டம்பர் 22, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனந்த்துறை (Ministry of Environment & Forests Affairs) கண்காணிப்பு குழுவின் பரிந்துரையை நிராகரித்ததோடு விரிவாக்கத்துக்கும் அனுமதி வழங்கியது. ஆம், ஆரம்பத்தில் ஆண்டுக்கு 40,000 டன் என்றிருந்த உற்பத்தி உச்சவரம்பை 70,000 டன் என்றும் உயற்தியிருக்கிறது. ஆனால் 2004-ல் இந்த ஆலை உற்பத்தி செய்ததோ 1,20,000 டன்னுக்கும் அதிகமாக.
இந்த ஆலையை சுற்றி நடந்துள்ள முறைகேடுகளை வெறும் வலைதளம் மூலம் கிண்டி பார்த்தபோதே நான் அதிர்ந்து போனேன்.
மக்கள் நலனில் அக்கரையற்ற அரசும், சுயநலம் புரையோடிப்போன முதலாளித்துவமும் கைகோர்த்தால் என்னென்ன அலங்கோலங்கள் நடக்கும் என்பதற்கு ஸ்டெர்லைட் ஒரு நல்ல உதாரணம்.
இதனை பிரச்சினைகளுக்கும் மத்தியில், எத்தனை கட்சிகளும், இயக்கங்களும் மக்களுக்காக இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளன..?
நாட்டை காப்பாற்ற அரசியலுக்கு வருவதாய் உணர்ச்சிவசப்பட்டு பேசிய எத்தனை சினிமாக்காரர்கள் மக்களோடு களத்தில் போராடுகிறார்கள்..?
தாங்கள் நடுநிலை தவறாதவர்கள் என்று மார்தட்டும் எத்தனை ஊடகங்கள் இந்த சமூக பிரச்சினையை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன..?
தோழர்களே…! மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது ஒரு ஆலைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுயநல முதலாளித்துவ சுரணடலுக்கும் எதிரான போராட்டம்.
இதனைபேர் கூடியிருந்தும், இவ்வளவு கோபம் இருந்தும், எப்படி இந்த பெருங்கூட்டம் எந்த அநாகரீக அசம்பாவிதமும் செயாமல் போராடுகிறது..? சட்டென்று பார்க்க பெருமையான விஷயமாக தெரிந்தாலும் இது சற்று ஆராயப்படவேண்டிய விடயம்.
நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாகரீகமான பொறுமைசாலிகளா..?
அல்லது போர்குணம் வற்றிப்போய் ஆயுதம் ஏந்தக்கூட அஞ்சி நடுங்குகிறோமா..?
தட்டித்திறக்காத கதவுகள் தகர்க்கப்பட வேண்டும்.
இல்லையென்றால், விரைவில் பாசிச கைக்கூலிகள் இந்த போராட்டக்காரர்களுக்குள் பிளவு ஏற்படுத்தி போராட்டத்தை பிசுபிசுக்க வைத்துவிடுவார்கள்.
கொஞ்சம் நாட்களுக்குபின் மீண்டும் வேறொரு பிரச்சினைக்கு நாம் வேறொரு ஊரில் பல்லாயிரக்கணக்கில் கூடி கலைவோம்…