ஸ்டெர்லைட் போராட்டம்… பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம்!..

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்து வந்த கலவரத்தில் போலீஸாருக்குப் பயந்து மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் நேற்று முன் தினம் தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்துவருகிறது. பலர் படுகாயம், 12 பேர் உயிரிழப்பு என தூத்துக்குடியே அமைதியற்றுக் காணப்படுகிறது. பொதுமக்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே கடும் தாக்குதல் நிலவிவருகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையினர், பொதுமக்களை எதிரிகளைப்போல் நினைத்து கண்மூடித்தனமாகத் தாக்குவதாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

வெளியில் இருக்கும் காவல்துறையினருக்குப் பயந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். மூன்றாவது நாளாக அனைத்துக் கடைகள் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தங்களின் அத்தியாவசிய தேவையான பால், தண்ணீர் ஆகியவற்றைக்கூட வாங்க வெளியில் செல்ல முடியவில்லை. வீட்டுக்கு வெளியே யாரையாவது கண்டால் போலீஸ்காரர்கள் தாக்குகிறார்கள்.

ஆண்கள் வெளியில் சென்றால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்கின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர் தூத்துக்குடி மக்கள். நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஒவ்வொரு தெருவாக சென்று வீட்டின் உள்ளே இருக்கும் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்களில் ஒவ்வொருவரின் வாக்கு மூலத்தையும் தனித்தனியாக நீதிபதி பெற்றுக்கொண்டார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகர் பகுதியில் இன்றும் கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இதனால் அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.