முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியில், கடந்த 18 ஆம் திகதி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.
இந்த நினைவேந்தல் தொடர்பான நிழற்படம் சமூகவலைதளங்களில் பதிவாகியிருக்கிறது.
நினெவேந்தல் படங்களைக் கண்ட பேரினவாத கும்பல் ஒன்று குறித்த வங்கிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாகவும் வங்கியின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,
குறித்த வங்கியின் கிளிநொச்சிக்கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியில் இருந்து இடை நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.
முள்ளிவாய்கால் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள குறித்த தனியார் வங்கி உட்பட வடபகுதியி்லுள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழமை.
ஆனால் இந்த வருடம் மாத்திரம், குறித்த வங்கியில் விசாரணைகளை நடத்தி ஆரம்ப கட்டமாக, உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏனைய தனியார் வங்கி ஊழியர்கள் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
விசாரணகள் தொடரும் என்ற போர்வையில் இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அக்கரைப்பற்றையும் (அம்பாறை) சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது.