கேபிள் ரீவி இணைப்புகளுக்கு ஆபத்து!! – யாழ். நீதிமன்று வழங்கிய கட்டளை!!

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.

யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு ஓழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோழும்பிலிருந்து வந்து முன்னெடுக்கவுள்ளனர்.

ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் சேவையையும் பெற்றுக்கொள்ளவேண்டும். யாழ்ப்பாணம் பொலிஸாரின் உதவியைப் பெற்று இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நீதிமன்று அனுமதி வழங்கவேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (23) புதன்கிழமை விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கிக் கட்டளை வழங்கினார்.யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் நல்லூர் பிரதேசம் உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.