விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

டுபாயில் இருந்து  கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப் பிடித்திழுத்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில்  வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்கிசை பகுதியைச் சேர்ந்த 49 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் மேல் மாகாணத்தின் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் மேற்பார்வையில்  நிர் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அத்துகோரளவின்  ஆலோசனைக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  அனுஷ ரூபசிங்க தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த ஸ்ரீ லங்கன் விமானம் கடந்த செவ்வாயன்று டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளது. இவ்வாறு வரும் வழியில் நடுவானில் வைத்து குறித்த வர்த்தகர்  முதல் தர வரிசையில் பயணித்துள்ளார். இதன்போது அவர் அங்கிருந்த விமான பணிப் பெண்ணிடம்  விலை மதிப்பு மிக்க மதுபானம் கோரியுள்ளார்.  தூஷன வார்த்தைகளால் திட்டியே அவர்  பணிப்பெண்ணிடம் மதுபானத்தை கோரியுள்ளார்.

பின்னர் அந்த பணிப் பெண், அவர் கோரிய மது பானத்தை பிரிதொரு பணிப் பெண்ணின் கையில் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த மது பானத்தை அப்பணிப் பெண் குறித்த வர்த்தகருக்கு கொடுத்த போது, அவர் அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தததாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பணிப் பெண், வர்த்தகரின் கையை தட்டிவிட்டு ஒருவாறு சுதாகரித்துக்கொண்டுள்ளதுடன் அவர் அங்கிருந்து எழுந்து சென்றதால் பணிப் பெண்ணை தூஷன வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இந் நிலையிலேயே பாதிக்கப்பட்ட இரு பணிப் பெண்களும் விமான பாதுகாப்பு அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்த போது அது குறித்து கட்டுநாயக்க பொலிஸாருக்கு அறிவித்த பாதுகாப்பு அதிகாரி, வர்த்தகரை பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்தே  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.