மலேசிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த எம்.ஹெச்-17 விமானம், ரஷ்யப் படை விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு வீழ்த்தியதால், விபத்துக்குள்ளானதாக விசாரணைக் குழு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த விமானம், உக்ரைன் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்துகுறித்து மலேசியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த கூட்டுவிசாரணக்குழு விசாரித்துவந்தது.
தி ஹேக் நகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுக் குழுவினர், விமானத்தை ரஷ்யப் படையினர் விமான எதிர்ப்புப் பீரங்கி மூலம் சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். வட ரஷ்யாவில் உள்ள ராணுவத் தளத்தில் இருந்து Buk-TELAR விமான எதிர்ப்பு ஏவுகணையால் விமானம் சுடப்பட்டதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. எந்த நிலையிலும் ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் இருந்து Buk-TELAR ரக ஏவுகணை உக்ரைன் எல்லைக்குள் ஏவப்படவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.