தென்னிலங்கையில் வேகமாகப் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் கராப்பிட்டிய மருத்துவமனை நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
தென் மாகாணத்தின் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவைக் கொண்டுள்ள காலி, கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியுமான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அளவில் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளிகள் நிரம்பி வழியும் காரணத்தினால் பெரும்பாலான நோயாளிகளுக்கு கட்டில் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் புற்றுநோய், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான சத்திர சிகிச்சைகளும் இந்த வைரஸ் நோயினால் தடைப்பட்டுள்ளது.
வைரஸ் நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளில் தங்கள் குழந்தைகளை அனுமதித்து சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதில் ஏனைய சிறுவர்களின் பெற்றோர் தயக்கம் காட்டுவதே அதற்கான காரணம் என்று தெரிய வருகின்றது.