ஜேவிபி சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 20வது திருத்த யோசனைகளை எதிர்க்கவேண்டிய தேவையில்லை என இலங்கையின் அரசமைப்பு நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதை நோக்கமாக கொண்டு ஜேவிபி முன்வைத்துள்ள யோசனைகள் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜேவிபி முன்வைத்துள்ள யோசனைகள் புதிய அரசமைப்பு உருவாக்கல் தொடர்பான இடைக்கால அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் யோசனைகள் சாதகமானவை என தெரிவித்துள்ள அவர் அரசமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் சாதிக்க முடியாதவற்றை இந்த யோசனைகளில் சாதிக்க முடிகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி 8 ம் திகதி மக்கள் வெளியிட்ட எதிர்பார்ப்பை 19 வது திருத்தத்தின் மூலம் பூர்த்தி செய்ய முடியவில்லை,அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நான் பிரதிநிதித்துவம் செய்யும் இடதுசாரி அணியினர் புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதையே இன்னமும் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20வது திருத்தத்தின் மூலம் ஜேவியால் மாத்திரம் தனியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள ஜயம்பதி விக்கிரமரட்ன இரு முக்கிய கட்சிகளும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.