சந்திரனில் நடந்த விண்வெளி வீரர் மரணம்..

சந்திரனில் நடந்த அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஆலன் பீன் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்

அமெரிக்காவின் ‘நாசா’ மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஆலன் பீன் (86). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் ஹீஸ்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இவர் 2 தடவை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டவர். அப்பல்லோ விண்கலம் மூலம் முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரன் சென்று திரும்பினார். அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து அப்பல்லோ விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவுடன் ஆலன் பீன் சந்திரன் சென்றார்.

அப்போது அவர் சந்திரனில் இறங்கி நடந்தார். இச்சம்பவம் கடந்த 1969-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி நடந்தது. இதன் மூலம் இவர் சந்திரனில் நடந்த 4-வது விண்வெளி வீரர் ஆனார்.

சந்திரனில் தரை இறங்கி நடந்த அவர் அங்கு 32 அங்குலம் தோண்டி பாறைகள், தாதுக்கள் மற்றும் தூசிகளை எடுத்து வந்தார்.

அவரது மரண செய்தியை நாசா மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆலன் பீன் அமெரிக்க கடற்படை சோதனை ஓட்ட விமானத்தின் விமானி ஆக இருந்தார். 1963-ம் ஆண்டில் ‘நாசா’ விண்வெளி மையத்தில் இணைந்து பணியாற்றினார்.