ஒரு பெண் தலாக் கூற முடியுமா?

தலாக் கொடுப்பதற்கு இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. பெண்களுக்கு தலாக் சொல்ல உரிமை இருக்கிறதா? என்கிற கேள்வி அறிவினாவாக சமூக வலைதளங்களில் ஆங்காங்கே எழுப்பப்படுகிறது.

பெரும்பாலும் முற்போக்கு முகாம்களைச் சேர்ந்த நண்பர்கள் தான் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். “இஸ்லாமிய சட்டங்களில் ஆண்களுக்கு மட்டுமே தலாக் சொல்ல உரிமையிருக்கிறது. பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது”. என்கிற பொதுக்கருத்து, பலமாக செல்வாக்கு செலுத்துகிறது.

ஆனால் இஸ்லாமிய சட்டங்கள் முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

மணமுறிவு பெற விரும்பும் ஆண்கள் தலாக் சொல்ல எப்படி உரிமை இருக்கிறதோ, அதைப் போல கணவனுடன் வாழப் பிடிக்காத பெண்களும் மணமுறிவு கேட்க உரிமை பெறுபவராக இருக்கிறார்.

இந்த முறைக்குப் பேர் “குலா” என்றழைக்கப்படும். குலா என்பது பெண்ணின் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் மணமுறிவு வழக்கு.

தலாக்கைப் போல மூன்று தவணைகள் காத்திருக்க வேண்டிய சட்டம் பெண்ணுக்கு பொருந்தாது. கணவனின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்கள் உடனடியாக ஜமாஅத்தை அணுகி, “குலா” கேட்கலாம்.

ஒரு பெண் குலாவுக்காக ஜமாஅத்தை அணுகும் பட்சத்தில், ஜமாஅத் அப்பெண்ணின் கணவனுக்கு அழைப்பு விடுக்கிறது. மூன்று அழைப்புகளுக்கு கணவன் செவி சாய்க்கவில்லையென்றால், அப்பெண்ணுக்கு உடனடியாக “குலா” வழங்கப்படல் வேண்டும். பெண்கள் குலா கேட்பதற்கு, ஜமாஅத்தார்களிடம் காரணம் கூட சொல்லத் தேவையில்லை.

கணவனை ஏன் அழைக்க வேண்டும். கணவனின் ஒப்புதலைப் பெற்றுத் தான் ஒரு பெண் மணமுறிவு பெற முடியுமா என்றால் இல்லை என்பதே பதில்.

ஏன் கணவன் அழைக்கப்படுகிறார் என்றால், இஸ்லாமிய திருமண ஒப்பந்தத்தின் படி, “மஹர்”என்கிற மணக்கொடை கொடுத்துத் தான் ஒரு பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஒரு பெண், குலாவுக்காக விண்ணப்பிக்கும் போது, கணவன் தான் கொடுத்த “மஹர்” தொகையை அப்பெண்ணுக்கே திருப்பியளிக்கும் பட்சத்தில், குலாவை கணவன் ஏற்றுக் கொள்கிறார் என்று பொருள்.

மஹரை பெண்ணே வைத்துக் கொள்ளட்டும், குலாவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என கணவன் கூறினாலும், அது ஏற்றுக் கொள்ளப்படும். ( கவனிக்க, வரதட்சணை என்பது இங்கே பெண்ணுக்கு ஆண் தான் கொடுக்க வேண்டும். பெண் ஆணுக்கு கொடுக்கும் வரதட்சணை எங்கும் சொல்லப்படவில்லை)

அப்படி குலா நிறைவடைந்து, கணவன் மனைவி இடையே மணமுறிவு ஏற்பட்ட பின்னர், குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் இவைகளுக்கு கணவனே பொறுப்பாகிறார்.

முதல் ஏழு ஆண்டுகள் கண்டிப்பாக குழந்தைகள் தாயிடமே இருக்க வேண்டும். ஏழு ஆண்டுகளுக்குப் பின் அப்பா அம்மா யாருடன் இருக்கப் போகிறோம் என்று முடிவு செய்யும் உரிமை, குழந்தைகளின் கைகளுக்கு சென்று விடுகிறது.

குலா மூலம் பிரிக்கப்பட்ட கணவன் மனைவி திரும்ப சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதி உண்டு. ஆனால் மறுபடியும் ஆண் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையை வழங்கி, புதிதாக திருமணம் செய்து கொள்வதைப் போல அதைத் தொடங்க வேண்டும்.

ஒரு தோழர் முகநூலில் இப்படியொரு கேள்வி கேட்டார். அவர் ஒரு வழக்கறிஞர். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே நிர்வகிக்கக் கூடிய ஜமா அத்தில், பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? நியாயமான கேள்வி தான்.

முழுவதும் பார்ப்பனிய மயமான இந்திய நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்கிற கேள்வியை நான் திருப்பிக் கேட்கவில்லை. காரணம் நடைமுறை எதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.

ஜமாஅத் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது, யாரை ? என்கிற கேள்வி முக்கியமானது. வழக்கமான இஸ்லாமிய திருமணங்கள் ஆண் பெண் இரு தரப்பிலிருந்தும் தலா இரு சாட்சியங்கள் முன்னிலையில் தான் கையெழுத்தாகும்.

எங்கள் பூர்விகமான ராமநாதபுரம் கமுதி மாவட்டத்திலிருந்து, பிழைப்புக்காக சென்னையில் குடியேறியவர்கள் ஏராளம். இருந்தும் கமுதி ஜமாஅத் சென்னையில் இன்னும் செயல்பட்டுக் கொண்டு தானிருக்கிறது.

திருமணங்கள் நடைபெறும் போது ஊர் ஜமாஅத் சார்பாக (உ.ம் கமுதி ஜமாஅத்) ஒரு பதிவேடும், தற்போது மணமக்கள் எந்த ஊரில் வசிக்கிறார்களோ அந்த ஊரின் பதிவேடும் ( சென்னை வியாசர்பாடி மொஹல்லா) கையெழுத்தாகி, இரு ஜமாஅத்தார்கள் முன்னிலையிலும் வாசிக்கப்படுகிறது. ஆகவே தலாக் ஆக இருந்தாலும் சரி, குலாவாக இருந்தாலும் சரி , நடைமுறையில் இரண்டிற்குமே ஜமா அத்தார்களின் ஒப்புதல் அவசியம்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஆணும் எந்த பெண்ணும் மணமுறிவை பெற்று விட இயலாது. அப்படி வேகமாக மணமுறிவு பெற முடியும் என்றால் அந்த உரிமை இங்கே பெண்ணுக்கு மட்டுமே இருக்கிறது.

காரணம் இல்லற வாழ்க்கையில், ஒரு பெண் மட்டுமே அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறாள். இரண்டு ஜமாஅத்திலுமே நீதி கிடைக்கவில்லை என்று ஒரு பெண் கருதுவாளேயானால், அவள் தாராளமாக தலைமை காஜியை அணுகலாம்.

கடந்த ஜனவரி 2017 வரை, தலைமை காஜிக்கு தலாக் குலா ஒப்புதல் வழங்க அதிகாரம் இருந்த நிலையில், உயர்நீதி மன்றம் அவ்வுரிமையை அரசாணையின் மூலம் நீக்கம் செய்திருக்கிறது.

ஆகவே குடும்பங்களில் ஏற்படும் பிணக்குகளை, தலாக் குலா விவகாரங்களை காஜியிடம் கொண்டு செல்லும் போது, அவர் முறையான வழிகாட்டுதல்களைச் செய்கிறார்.

குறைந்த பட்சம், இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதையாவது அவர் வலியுறுத்துகிறார். எனது பள்ளித் தோழி ஒருவர் திருமணமான மூன்றாம் மாதத்தில், குலாவுக்காக விண்ணப்பித்திருந்தார்.

ஜமாஅத் மூலம் தாமதமாகவே, தலைமை காஜியிடம் சென்றிருக்கிறார். தலைமை காஜியின் வழிகாட்டுதல்களின் படி, விரைவாக அவருக்கு தற்போது குலா வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியச் சமூகத்தில் திருமணங்கள் அனைத்தும் “புனிதம்” என்கிற கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கிறது. விவாகரத்தை விட, கணவன் எத்தகைய ஒடுக்குமுறைக்காரனாக இருந்தாலும் சேர்ந்து வாழு என்கிற அறிவுரை, ஒரு பெண்ணை நோக்கி எல்லா சமூகங்களிலும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.

இதற்கு இஸ்லாமிய சமூகமும் விதி விலக்கல்ல. இருந்தும் இஸ்லாம் திருமணங்களை “ஒரு ஒப்பந்தம்” என்கிற சட்ட நடைமுறையில் இருந்தே அணுகுகிறது.

சரி! இஸ்லாமிய ஜமாஅத்துகள் அனைவருமே அப்பழுக்கற்றவர்களா? பெண்ணின் விடுதலையை உறுதி செய்பவர்களா? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்