முத்துமாரி, தனது மகள் சத்யாவுடன் கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கல்லார் எஸ்டேட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சத்யா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று முத்துமாரியும், சத்யாவும் வீட்டின் பின்புறம் இருந்த விறகுகளை எடுத்து வீட்டுக்குள் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர்.
அப்போது புதருக்குள் இருந்து ஓடி வந்த சிறுத்தை கண்இமைக்கும் நேரத்தில் சத்யாவின் கழுத்தை கடித்து இழுத்து சென்றது. இதனை பார்த்த முத்துமாரி விறகு கட்டையால் தாக்கி விரட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த சத்யா பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனது மகள் சத்யா வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அவளுக்கு தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நான் என்னுடன் வேலைக்கு அழைத்து சென்று வந்தேன்.
நேற்று முன்தினம் நான் விறகுகளை அடுக்கி வைத்து கொண்டு இருந்தேன். சத்யா எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள்.
அப்போது திடீரென புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை எனது மகளின் கழுத்தை பாய்ந்து கடித்து புதருக்குள் இழுத்து சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் எனது மகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஆக்ரோஷத்துடனும் கையில் இருந்த விறகு கட்டையால் சிறுத்தையின் தலையில் ஓங்கி அடித்தேன்.
அப்போது சிறுத்தை வலி தாங்காமல் எனது மகளை போட்டு விட்டு புதருக்குள் சென்று மறைந்து விட்டது.
நல்லவேலையாக சிறுத்தை என்னை தாக்காமல் சென்று விட்டது. எங்கள் குலதெய்வம் மாரியம்மாள் எனது மகளையும் என்னையும் காப்பாற்றி விட்டாள்.
தற்போது எனது மகள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தையின் நகம் மற்றும் பல் ஆழமாக பதிந்துள்ளதால் 9 தையல் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.