முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை! வெடித்தது சர்ச்சை!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்திய ஊழியர்களை தனியார் வங்கி பணிநீக்கம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தனியார் வங்கிக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் உடனடியாக மூடிவிட வேண்டும், அதனுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது என தமிழ் உணர்வாளர்கள் பேஸ்புக்கில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களில் வடக்கு கிழக்கில் பலர் கணக்குகளை மூடியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை என்னவென தனியார் வங்கியின் முகாமைத்துவத்தை தொடர்புகொண்டு வினவியபோதும், அதை கூற மறுத்துவிட்டனர். எனினும், பொறுப்பான சில அதிகாரிகள் உத்தியோகப்பற்றற்ற முறையில் இதுகுறித்து பேசினார்கள்.

கடந்த இரண்டுநாளாக மக்களின் உணர்வுகள் தமக்கு எதிராக இருந்ததை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் வடக்கு, கிழக்கிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கி முகாமைத்துவ அதிகாரிகள் தமது மேலதிகாரிகளிற்கு விசயத்தின் பாரதூரதன்மையை தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் அறிவித்துள்ளனர்.

ஆரம்பதிட்டப்படி, அந்த அலுவலர்களை நிபந்தனையின்றி மீளிணைக்க முகாமைத்துவம் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. எனினும், இந்த விவகாரம் தென்னிலங்கையிலும் பரவ ஆரம்பித்துள்ளதையடுத்து, நாளைய அறிவிப்பை முகாமைத்துவம் கைவிட்டுள்ளதாக உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று இரவு வரை நிலைமையை அவதானித்து, கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை காலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய தெளிவான அறிவித்தல் வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தனியார் வங்கியின் நடவடிக்கை வடமாகாணசபையும் கண்டிக்க முஸ்தீபு செய்துவருகிறது. மாகாணசபையின் அடுத்த அமர்வில் இந்த விவகாரம் பேசப்படவுள்ளது. இதை அவசர பிரேரணையாக சமர்ப்பிக்கவும் சில உறுப்பினர்கள் முயன்றுவருகின்றனர்.

எனினும், அடுத்த அமர்வில் இந்த விவகாரம் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், அடுத்த அமர்விற்கிடையில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படாவிட்டால், வங்கியின் நடவடிக்கையை கண்டித்தும், பணிநீக்கப்பட்ட ஊழியர்களை மீளிணைக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்படலாமென தெரிகிறது.