இந்த உலகு கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றாலும், மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அமானுஷ்யங்களும் பிரம்மிக்க வைக்கும் ஆச்சர்யங்களும் நிறைந்ததாகத்தான் காணப்படுகின்றது.
உயிர்கொல்லும் அமானுஷ்ய தீவு! காற்றில் கரைந்து விடும் மனிதர்கள், அழைத்துச்செல்லும் வேற்றுக்கிரகவாசிகள் இப்படியெல்லாம் நீங்கள் அறிந்ததுண்டா?
இந்நிலையில் யாருமே வசிக்க முடியாத மர்மமான தீவு ஒன்று இப்புவியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த தீவுக்குச் சென்ற எவரும் இதுவரையில் உயிருடன் திரும்பியதே இல்லை என்பதுதான் வியப்பிற்குரியது.
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டித்தீவுகள் உள்ளன.
அவ்வாறு காணப்படும் குட்டித்தீவுகளில் ஒன்றுதான் என்வைன்டினெட் என்று அழைக்கப்படும் ஓர் சிறிய நிலப்பகுதியும், உயிர்கொல்லும் தேசமுமாகும்.
என்வைன்டினெட் என்றால் திரும்பி வராது என்று அர்த்தமாம், இந்த தீவுக்கு இப்படிப் பெயர் வந்தமைக்கான பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஷ்யமும் மர்மமும் நிறைந்தது.
1900ஆம் ஆண்டுகளில் என்வைன்டினெட் தீவில் பெருமளவிலான மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள், மீன் பிடிப்பதை பிரதான தொழிலாக கொண்ட அவர்கள், பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
எனினும், வியாபாரத்திற்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் வசிக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு சென்று வருவதுதான்.
இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள்.
தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அன்றிலிருந்து, தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள், வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள், திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.
1934ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராய்ந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் என்வைன்டினெட் தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.
ஆர்வமான விவியன் இந்தத் தீவுக்கு என்னதான் ஆனது? என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார்.
மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று என்வைன்டினெட் தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.
பிறகு, ஹெலிகொப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் தெரிந்தது பல அதிர்ச்சிகரமான விடயங்கள், அங்கு மனிதர்கள் இருந்த தடயமே இல்லையாம்.
பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை என்ற தகவல்களே இதன்மூலம் வெளிவந்தன.
எனினும், என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை தூர நின்றே ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்!