ஒரே நேரத்தில் 25 பேர் தற்கொலை! பதறவைக்கும் சம்பவம்!

நெய்வேலியில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் 25 பேர் ஒரே நேரத்தில் விசம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி முதல் சுரங்க விரிவாக்கத்தில் 25 வருடங்களாக சிலர் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்தது என்.எல்.சி நிறுவனம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை இதே சுரங்கத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் பணியிட மாற்றம் அறிவிப்பு வெளியானதில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஒவ்வொரு முறை போராட்டத்தின் போதும் நிர்வாகம் இவர்களுடன் பேச்சுநடத்தி போராட்டத்தை நிறுத்த முயன்றதே தவிர, அவர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

என்.எல்.சி நிறுவன முதல் சுரங்க விரிவாக்கத்துக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்லுக்குழி, வாணாதிரபுரம், காட்டுக்கொல்லை உட்பட்ட சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடு, நிலம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

இதன் அடிப்படையில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 41 பேர் முதல் சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 25 -க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் போராட்டக்காரர்கள் 25 பேர் தங்களின் கைகளில் வைத்திருந்த விசத்தை அருந்தி உயிரை மாய்க்க முயன்றனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில் 6 பேர் நிலை மோசமாக உள்ளதால், அவர்கள் அனைவரும் புதுச்சேரி மகாத்மா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.