கை அழகு பெண்களுக்கு மிக முக்கியம். ஏன்என்றால் கை சருமத்தை பார்த்தால் அவர்களது வயது தெரிந்துவிடும். சிலர் முகத்தை அதிக சிரமமெடுத்து அலங்காரம் செய்து தங்களை இளமையாக காட்டிக்கொண்டு கையை கண்டுகொள்ளாமலே விட்டு, வயதை வெளிப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார்கள். கையால் பெரும்பாலான வேலைகளை செய்வதாலும், கைகளில் நேரடியாக சூரிய ஒளி படவிடுவதாலும் கை சருமம் முதுமையை வெளிப்படுத்துகிறது. கைகளை அழகாக்க இதோ டிப்ஸ்:
கடலை மாவை கை மற்றும் கால் பாதங்களுக்கும் பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் பாலை சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை கை, கால்களில் பூசிவிட்டு சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவி வர வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இவ்வாறு செய்து வந்தால் சரும வறட்சியை தவிர்க்கலாம்.
ஒரு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை கை, கால்களில் தடவிவிட்டு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும். சரும வறட்சியை தவிர்க்க மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தலாம்.
கற்றாழையின் தோலை சீவி விட்டு அதிலிருக்கும் ஜெல்லை கைகள் மற்றும் கால் பாதங்களில் பூச வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இருமுறை இவ்வாறு செய்து வரலாம். கற்றாழை எண்ணெய்யையும் கைகளுக்கு பயன்படுத்தலாம்.
தக்காளி பழம் புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை காக்கும். தக்காளி பழத்தை அரைத்து சருமத்தில் பூச வேண்டும். பத்து நிமிடங்களில் தண்ணீரில் சருமத்தை அலசி விடலாம். தொடர்ந்து செய்துவந்தால் கைகளில் கறுமை நிறம் படிவதை தவிர்க்கலாம்.