இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய 1978 -1980 காலகட்டத்தில், புலிகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவின் எம்.ஐ 5 மற்றும் எஸ்.ஏ.எஸ். அமைப்புகள் பயிற்சிகளை அளித்தமை தொடர்பான, 200 ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்ட தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ கடந்த வாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
தேவையற்ற ஆவணங்கள் என்று, கூறி, இலங்கை தொடர்பான – முக்கியமாக இந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தமிழ்ப் புலிகள் மற்றும் தமிழ்ப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, பிரித்தானியாவின் சிறப்புப் படைப்பிரிவுகளான எம்.ஐ 5 மற்றும் எஸ்ஏஎஸ் அமைப்புகள் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியமை தொடர்பான ஆவணங்களே அழிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி, பல தமிழ் அமைப்புகள் ஆயுதமேந்திய போராட்டங்களை ஆரம்பித்திருந்தன. ஆனாலும், பொதுவாக, எல்லா அமைப்புகளையும், வெளிநாட்டு அரசுகள், புலனாய்வு அமைப்புகள், தமிழ்ப் புலிகள் என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டிருந்தன.
பிரித்தானிய வெளிவிவகார பணியகத்தினால் அழிக்கப்பட்ட காலப்பகுதிக்குரிய ஆவணங்களில், விடுதலைப் புலிகள் குறித்து மாத்திரமன்றி, ஏனைய தமிழ் அமைப்புகள் தொடர்பான தகவல்களும் இருந்தன.
இந்தக் காலகட்டத்துக்குரிய 158 ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதை வெளிவிவகாரப் பணியகம் உறுதி செய்திருக்கிறது.
1978ஆம் ஆண்டுக்குரிய ஒரே ஒரு ஆவணம் மாத்திரம் தப்பிப் பிழைத்திருக்கிறது. தேவையற்ற இரகசிய ஆவணங்களை அழித்து விட 2012ஆம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் முடிவு செய்தது.
அதற்கமைய, கென்யா உள்ளிட்ட பல நாடுகளில் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு பிரித்தானியா அளித்த பங்களிப்புகள் தொடர்பான பெருமளவு ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் தான், தமிழ்ப் புலிகள் மற்றும், அவர்களை ஒடுக்குவதற்காக பிரித்தானியாவின் புலனாய்வுப் பிரிவுகள் அளித்த உதவிகள் பற்றிய ஆவணங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இது ஒரு வரலாற்றுத் தடய அழிப்பாக நோக்கப்படுவதாக, பிரித்தானியாவில் உள்ள நிபுணர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழ் அமைப்புகளின் ஆயுதமேந்திய போராட்டத்தை அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உன்னிப்பாகக்கண்காணித்திருந்தன.
இந்தப் போராட்டம் தொடர்பான ஏராளமான தரவுகளையும், தகவல்களையும் ஆவணப்படுத்தியிருந்தன.
அவ்வாறான தரவுகளை உள்ளடக்கியிருந்த ஆவணங்களும் கூட பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் திரட்டிய தகவல்கள் அனைத்தும் முழுமையானவை, உண்மையானவை என்று கூறமுடியாது. ஆனால், வரலாற்றைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கு – அவை முக்கிய ஆவணங்களாக, தகவல் மூலங்களாக அமைந்திருக்கும்.
வெளிநாட்டு உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளால் திரட்டப்பட்ட தகவல்கள் எல்லாமே சரியானவையாக இருக்கும் என்றில்லை. அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏயின் இரகசிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள பல தகவல்களே அதற்குச் சான்று.
சிஐஏயினால் தொகுக்கப்பட்ட பல இரகசிய ஆவணங்கள், 2012ஆம் ஆண்டு பகிரங்கப்படுத்தப்பட்டன. தகவல் மூலங்கள் மற்றும் மறைக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட சில இரகசியங்கள் மாத்திரம் அழிக்கப்பட்ட நிலையில் அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
அவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்களில், ஒன்று “சிறிலங்கா: அதிகரிக்கும் கிளர்ச்சி” ( Sri lanka : The Growing Insurgency) என்ற தலைப்பிலானது. இது 1986 செப்ரெம்பரில் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆவணத்தின் முதல் பக்கத்தில், கிளர்ச்சியாளர்கள் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும், அமெரிக்க நிலைகளைத் தாக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும், இலங்கைக்கு இராணுவ, பொருளாதார ரீதியில் உதவும் நாடுகளை இலக்கு வைக்கக் கூடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இது முன்னெச்சரிக்கையான குறிப்பாக இருந்தாலும், அத்தகைய ஆற்றலை தமிழ் அமைப்புகள் கொண்டிருந்தனவா அல்லது, தமிழ் அமைப்புகளின் பலத்தை மிகைப்படுத்தி ஆவணப்படுத்துவதில் சிஐஏ ஈடுபட்டதா என்ற கேள்விக்கு இடமுண்டு.
அதுபோன்று, சிஐஏயின் இன்னொரு இரகசிய ஆவணம், 1986 மார்ச்சில் தயாரிக்கப்பட்டது. அதன் தலைப்பு இலங்கையின் தமிழ் கிளர்ச்சி: மாக்சிச தாக்கம் (Sri lanka’s Tamil Insurgency: The Impact of Marxism). இந்த ஆவணம், தமிழ் அமைப்புகளின் போராட்டத்துக்கும், மாக்சிச சிந்தனைக்கும் முடிச்சுப் போடும் வகையில் அமைந்திருந்தது.
இதுபோன்ற பல இரகசிய ஆவணங்களைக் கூட- அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு தணிக்கை செய்து பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம், குறிப்பிட்ட காலத்துக்குரிய ஆவணங்களை அழித்திருப்பது சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
இலங்கையில் தமிழ் அமைப்புகள் ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியிருந்த போது, அப்போது ஆட்சியில் இருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் உதவியைத் தான் முதலில் நாடியிருந்தார்.
ஆரம்பத்தில் பிரித்தானியாவின் இரகசிய புலனாய்வுச் சேவைகள் தான், இலங்கைப் படையினருக்கு உதவிகளையும், பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தன.
பின்னர், பாகிஸ்தானும் தனது சிறப்பு பயிற்சி நிபுணர்களை அளித்திருந்தது
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் 1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்ட ஆவணத்தில், சுதந்திரம் கேட்டுப் போராடும் தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, பாதுகாப்பு நிபுணர் ஒருவரை இலங்கைக்கு அனுப்புமாறு, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே,ஆர்.ஜெயவர்த்தன பிரித்தானிய வெளிவிவகார பணியகத்திடம், கேட்டுக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய Sri Lanka: Security Assessment 1978 என்ற வெளிவிவகாரப் பணியகத்தின் ஆவணம் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், தப்பிப் பிழைத்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்பான, எம்ஐ5 இன் பணிப்பாளர், 1979இல் இரண்டு தடவைகள் பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதற்காக இலங்கைக்கு சென்றிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய விபரங்களை உள்ளடக்கிய 1979ஆம் ஆண்டின், Sri Lanka: Defence Visits from UK என்ற ஆவணம் வெளிவிவகாரப் பணியகத்தினால் அழிக்கப்பட்டு விட்டது.
அத்துடன், 1980இல், இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ கொமாண்டோ பிரிவுக்கு பயிற்சி அளிக்க எம்ஐ 5 ஐ சேர்ந்த உயர் அதிகாரி ஜக் மோர்டனின் பரிந்துரைக்கமைய, பிரித்தானியாவின் எஸ்ஏஎஸ் பிரிவின் அதிகாரிகள் குழுவான்று இலங்கைக்கு சென்றமை பற்றிய தகவல்களும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதுபற்றிய விபரங்களை உள்ளடக்கிய, UK military assistance to Sri Lanka, 1980 என்ற ஆவணத்தை வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டது.
இந்த எஸ்ஏஎஸ் குழு, இலங்கை இராணுவத்தின் 60 கொமாண்டோக்களுக்கு நான்கு மாதங்கள் பயிற்சிகளை அளித்திருந்தது.
இந்த விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளதன் மூலம், இலங்கையில் நடந்த போரில் தமது பங்கு பற்றிய ஆதாரங்களை இல்லாமல் செய்வதற்கு பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் முற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் உள்ளது.
ஏனென்றால், இலங்கையில் நடந்த போரில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் ஏராளமான போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. எனினும் பிற்காலத்தில் நடந்த மீறல்களே பெரும்பாலும் முக்கியத்துவப்படுத்தப்பட்டன. ஆரம்ப காலகட்டத்தில் நடந்த மீறல்கள் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.
ஆனால், விரிவான போர்க்குற்ற விசாரணை ஒன்று -நம்பமான பொறிமுறை ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில், அடி முதல் நுனி வரை ஆராயப்படும்.
அத்தகைய ஒரு சூழல் எழுந்தால், தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் முளைவிட்ட சூழல், அதனை அடக்குவதற்கான முயற்சிகள், அதற்கு உதவிய தரப்புகள் என்று பட்டியலிடப்படும்.
அவ்வாறானதொரு பட்டியலுக்குள் தாமும் சிக்கி விடக்கூடாது என்று பிரித்தானியா எண்ணுகிறதா என்ற கேள்வியும் உள்ளது.
ஆனால் அவ்வாறானதொரு விசாரணை நடத்தப்பட்டு, விரிவாக ஆவணப்படுத்தும் பொறிமுறை உருவாக்கப்பட்டால், அதில் பிரித்தானியா மாத்திரமன்றி, இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், என்று பல நாடுகளின் இரகசியங்கள் பலவும் அம்பலத்துக்கு வரக் கூடும்.
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம், 1978 – 80 காலப்பகுதிக்குரிய ஆவணங்களையே அழித்திருப்பதாக கூறியிருந்தாலும், அதற்குப் பிற்பட்ட காலத்துக்குரிய ஆவணங்களும் கூட அழிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால், 1978-80 காலப்பகுதியில் பிரித்தானிய இரகசிய பாதுகாப்புச் சேவை அமைப்புகள் நிபுணத்துவ ஆலோசனைகளை மாத்திரமே வழங்கியிருந்தன.
2014ஆம் ஆண்டு வெளியாகிய, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் ஆவணம் ஒன்றில், இந்தியாவில் பொற்கோவில் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, 1984 செப்ரெம்பரில், எஸ்ஏ.எஸ் அதிகாரிகளை இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு பிரதமர் மாக்கிரட் தட்சர் அரசாங்கம் அனுமதி அளித்தது என்று கூறப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி, தமிழ்ப் போராளிகளுக்கு உதவுவதை நிறுத்துங்கள் என்று அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம், தட்சர் கோரியதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
1980இற்கும், 87 இற்கும் இடைப்பட்ட காலத்தில், பிரித்தானிய பாதுகாப்புச் சேவை அமைப்புகள் இலங்கைப் படையினருக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்குவதற்கும் அப்பால், நேரடியாகவும் களமிறங்கியிருந்தன.
1984 -87 காலகட்டத்தில், பிரித்தானிய அரசின் அனுமதியுடன் கேஎம்எஸ் (கினி மினி) எனப்படும், முன்னாள் எஸ்ஏஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஊடாக, பாதுகாப்பு அதிகாரிகளும், விமானிகளும், நேரடியாகவே போர் முனைச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
1986ஆம் ஆண்டு வல்லைப் பாலத்தை குண்டு வைத்து தகர்த்து, வடமராட்சிக்கும் வலிகாமத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும் நடவடிக்கையில் விமானிகளாகவும், கள வழிநடத்தல் அதிகாரிகளாகவும் பிரித்தானிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போதும், விமானிகளாக மாத்திரமன்றி பலாலியில் இருந்து இராணுவத்தை வழிநடத்தும் அதிகாரிகளாகவும் பணியாற்றியிருந்தனர்.
ஆக, இலங்கைப் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பு மோசமான ஒரு வரலாற்றையே கொண்டது.
இந்த மோசமான வரலாற்றுப் பக்கங்களை அழிப்பதற்கு பிரித்தானியா முற்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது.
ஆனால், இத்தகைய ஆவணங்களை அழிப்பதன் மூலம் மாத்திரம், இந்தக் கறைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று பிரித்தானியா நினைத்தால், அது அவர்களின் முட்டாள்தனம்.