`நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை!’ – அசத்தும் காலா டிரெய்லர்- (வீடியோ)

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இருவரது கூட்டணியில் வெளிவந்த கபாலி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் 2-வது பட அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.

படத்தின் பெயர் `காலா’ என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித், “காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார்.

காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் திரையுலகினரின் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள `செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது.

படத்தின் டீசரும் வெளியாக பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை நந்தனத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழாவை சமீபத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் தயாரிப்பாளர் தனுஷ்.

இந்தநிலையில், காலா படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். அதில், `நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…. கூட்டுங்கடா மக்கள….’, நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை’ என ரஜினி பேசும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

வில்லன் நானா படேகரின் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில், ஈஸ்வரி ராவ் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.