தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென நீண்ட காலமாக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அந்தத் தொழிற்சாலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செலவம் தூத்துக்குடி சென்று அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்வையிட்டார். இதற்குப் பிறகு சென்னை திரும்பிய அவருடன், எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஸ்டெர்லைட் ஆணை தொடர்ந்து இயங்குவதற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அதனைப் புதுப்பிக்க ஸ்டெர்லைட் விண்ணப்பித்ததாகவும் ஆனால், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது.
எனவே ஆலை இயங்குவதற்கான இசைவாணையை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம், ஏப்ரல் 9ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும், ஆலைக்கான மின்சார இணைப்பு மே 25ஆம் தேதியன்று துண்டிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், முதலமைச்சரையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்தித்து ஆலையை மூடக் கோரியதால் ஆலையை மூடுவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டிருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.