மும்பை: துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படமான தடக் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜான்வி தனது அம்மா பற்றி முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது,
நான் நடிகையாவதை என் அம்மா விரும்பவில்லை. என் தங்கை குஷி நடிகையானால் ஓகே என்று இருந்தார் அம்மா. நான் ரொம்ப அப்பாவி என்பதால் திரையுலகம் வேண்டாம் என்று நினைத்தார்.
நானும், தங்கையும் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்று அம்மா விரும்பினார். பெற்றோருடன் பயணம் செய்து கொண்டே இருந்ததாால் பள்ளிக்கு சரியாக சென்றது இல்லை. படித்து முடித்த பிறகு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அம்மாவின் மறைவுக்கு பிறகு அர்ஜுன் அண்ணாவும், அன்ஷுலா அக்காவும் எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவை இழந்த துக்கத்தில் இருந்து வெளியே வர முடியாது என்று நினைக்கிறேன்.
நான் வளர்ந்துவிட்டாலும் அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான். காலையில் எழுந்தவுடன் அம்மாவை தான் தேடுவேன். சில நேரம் எனக்கு உணவு ஊட்டிவிடுவார். அம்மா தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார்.
அவர் துபாய் செல்வதற்கு முதல் நாள் தூக்கம் வரவில்லை தூங்க வைங்க என்றேன். அம்மா பேக் செய்வதில் பிசியாக இருந்தார். அதன் பிறகு பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார் என்றார் ஜான்வி.