“100 நாள் வேலைத்திட்டம் முட்டாள்தனமான வேலைத்திட்டமாகும்”

100 நாள் வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செயலாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாதுலுவாவே சோபித தேரரின் 76 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாதுலுவாவே சோபித தேரரின் 76 பிறந்த தின நினைவு தினத்திற்கு எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை. எந்தவொரு தகவலும் எனக்கு வழங்கவில்லை. இந்த நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் இப்படிதான் நடக்கின்றன.

இந்த அரசாங்கத்தின் கடந்த மூன்று வருடங்கள் தொடர்பில் இதனை விட இன்னும் பல தகவல்களை பெற வேண்டுமாயின் என்னை அணுகுங்கள். அவ்வாறான விவாதத்துக்கு அழைத்தால் அதற்கும் நான் தயாராக உள்ளேன். திறந்த விவாததிற்கும் நான் தயாராக இருக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்த பின்னர் பழைய வாகனங்களை மாத்திரம் வைத்து விட்டு புதிய வாகனங்களை அவர் எடுத்துக்கொண்டு சென்றார். இரண்டு புதிய வாகனங்கள் மாத்திரமே மிஞ்சியிருந்தன.அதனை நான் பிரதமருக்கு வழங்கினேன். இரண்ரை வருடங்கள் நான் பழைய வாகனமே உபயோகித்தேன்.

முன்னாள் ஜனாதிபதி தோல்வி அடைந்த பின்னர் தங்காலை செல்ல ஹெலிகொப்டர் வழங்கியது யார்? சோபித தேரர் வானுலகில் இறைவனாக பரிணமித்தால் உண்மை வெளியாக வேண்டும் என பிராத்திக்குமாறும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

100 நாள் வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று தெரியாது. எனினும் அது முட்டாள்தனமான செயலாகும் என அதனை தயாரித்தவர்களுக்கு நான் கூறவிரும்புகின்றேன்.

மூளையிருந்திருந்தால் நான் பதவியேற்றதும் அன்றைய இரவே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். எனது 47 வருடகால அரசியலில் கடந்த மூன்று வருடங்களில் நான் இருந்ததை விட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் என்றார்.