புத்தகங்களின் பெறுமதி தெரியாத புத்தியில்லாத கூட்டம் 1981 மே 31ம் திகதி இரவு தீயிட்டு எரித்தனர் பாதுகாக்கப்பட வேண்டிய யாழ் பொது நூலகத்தினை. தென்கிழக்காசியாவிலே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது இந் நூலகமே ஆகும். இது எரியூட்டப்பட்டபோது கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன் 19 ஆயிரம் அங்கத்தவர்கள் இந்நூலகத்திலே அங்கத்துவம் பெற்றிருந்தனர். இந் நூலகமானது 1933ம் ஆண்டிலிருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. 1959ம் ஆண்டு முதலாவது கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள், நூல்கள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப்பிரதிகள் போன்றவை இந் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. தனிமனிதனுடைய, குழுக்களினுடைய உழைப்பு நூலகத்திலே பொக்கிஷமாகப் பேணி பாதுகாக்கப்பட்டு வந்தது. கலை, இலக்கியம், சோதிடம், வைத்தியம் என பல துறைகள் சார்ந்த நூல்கள் இருந்ததுடன் வாசகர்களுக்கு மேலும் அறிவினை வலுவூட்டியது. இவ்வாறான ஓர் நூலகம் எரிக்கப்பட்டது என்பது எம் தமிழர்களின் உழைப்பினையும், அறிவினையும் அடியோடு அழித்த செயலாகும்.
நாம் ஒரு புத்தகம் வைத்திருந்தாலே அதனை எவ்வாறெல்லாம் பேணிப்பாதுகாத்து வருகின்றோம். அது தொலைந்தோ அல்லது கிழிந்தோ விடுமானால் எம்மால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால் எமது யாழ் நூலகத்திலே இருந்த 97 ஆயிரம் அரிய நூல்கள் எரிக்கப்பட்டது என்பதனை நினைக்கும் போது பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது.
நூலகம் எரிக்கப்பட்டபோது அனைத்து புத்தகங்களும், ஓலைச்சுவடிகளும் அழுது கண்ணீர் விட்டிருக்கும். தன்னை உருவாக்கியவர்களை நினைத்து மனவேதனைப் பட்டிருக்கும். நூல்களிடைய தாற்பெரியமும், அதனுள் இருக்கும் சிந்தனைகளும், கருத்தாளங்களும் தமிழ் மக்களுக்கு சென்றடையக் கூடாது எனும் நோக்கில் தமிழர்களினுடைய ஆதாரங்களை அழிக்கும் இன வெறியே இங்கு இடம்பெற்றிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய இடம் பாழாக்கப்பட்டது இனவெறிக் கும்பல்கள் மூலம்.
இங்கிருந்த நூல்கள் விலைமதிக்க முடியாதவை. கையெழுத்துக்களால் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகள் அனைத்தும் இதனுடன் அழிந்து போய் விட்டன. யாழ் நூலகமானது திடீரென உருவாக்கப்பட்ட ஒன்று இல்லை. 1933ல் சிறிய அறையில் சில புத்தகங்களுடனும் பின் பல நூறு புத்தகங்களுடனும் இயங்கிய நூலகம் 1959ல் பெரிய கட்டிடமாகத் திறந்து வைக்கப்பட்டது. 1981ல் எரிக்கப்பட்டபோது நூல்களின் தொகை 97 ஆயிரமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் அதிகரிப்பு வாசகர்களினுடைய விருப்பிலும் ஆளுமையாளர்களினுடைய திறமையினாலுமே இடம்பெற்றதொன்றாகும். பல வாசகர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியது இந் நூலகம்.
மழையிலும் பள்ளிப்பக்கம் ஒதுங்காதவர்கள் கூட யாழ் நூலகத்திலே கால் பதித்தனர். இதற்குக் காரணம் இக் கட்டிடத்தின் அழகியலும் அங்கு இருந்த புத்தகங்களின் தரமுமே ஆகும். யாழ் நூலக எரிப்பானது படித்த இனவெறியர்களின் சூழ்ச்சியினாலான ஓர் கீழ்த்தரமான செய்கையாகியது. காலங்கள் கடந்தாலும் மறவாத ஒரு வடு.
மகிழையாள்.