“இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவில்லை”

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்தாக  கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்பேதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தம் குறித்தும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பல்வேறு அபிப்பிராயம் இருந்தது. இந் நிலையில் நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சி அத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்தனர்.

இருபதாவது திருத்தமானது புதிதாக கொண்டுவரவுள்ள அரசியலமைப்பின் ஓரு அங்கமேயாகும். புதிய அரசியலமைப்பானது அரசாங்கத்தின் தேர்தல் கால பிரதான வாக்குறுதியாக அமைந்திருந்தது. அதற்காக பாராளுமனறத்தை அரசியலமைப்பு சபையாக ஆக்கினர். மற்றும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவையும் அமைத்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்து முழு அரசியலமைப்பு பற்றி பேசிய பின்னர் தற்போது அதன் ஓர் அங்கம் தொடர்பில் மாத்திரம் பேசுவதில் எமக்கு சந்தேகம் உள்ளது.

எனவே  ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்க தரப்பால்  வெற்றியடைய முடியாது. ஆகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தாது வேறு வழிகளில் ஜனாதிபதியை நியமித்துகொள்வதற்வதே குறித்த திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கின்றனர். இருபதாம் திருத்தத்தில் உள்ளார்ந்த காரணங்களை அடிப்படையாக கொண்டுதான் இத்திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்பார்க்கிறது.

மேலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப் படுவதாக இருந்தால் அரசியலமைப்பின்  13 ஆம் திருத்தம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் மீண்டுமொருமுறை கவனம் செலுத்த வேண்டும் என்றார்.