அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, என போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று எதிர்வு கூறப்படுபவர்களின் பெயர்களின் பட்டியலின் நீளம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இந்த வரிசையில் இப்போது புதிய பெயர் ஒன்று அடிபடுகிறது. அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல. ஆனால், முன்னணி அரசியல்வாதிகளை விடவும் பிரபலமானவர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவே அவர். அவரை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
கூட்டு எதிரணி கோத்தாபய ராஜபக் ஷவை களமிறக்கினால், அவரை தோற்கடிப்பதற்காகவே, குமார் சங்கக்காரவை பொதுவேட்பாளராக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது,
குமார் சங்கக்காரவின் ஒப்புதலைப் பெறாமலேயே, இதுபற்றிய ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் குமார் சங்கக்கார அல்லது அவரைப் போன்ற ஒருவரை – பொதுவேட்பாளராக தெரிவு செய்வதற்கான முயற்சிகள் நடப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
அரசியல் களத்தில் பலமான தலைவர்கள் பலர் இருந்தாலும், அதற்கு வெளியே இருந்து வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இது தான் முக்கியமானது.
இதனை முள்ளை முள்ளால் அகற்றுகின்ற ஒரு வைத்தியம் என்று கூடத் கூறலாம்.
கோத்தாபய ராஜபக் ஷவை கூட்டு எதிரணி களமிறக்கினால் அவரை சுலபமாகத் தோற்கடித்து விடுவோம். அவர் ஒரு, பலவீனமான வேட்பாளர் என்ற கருத்தை ஐ.தே.கவின் தலைவர்கள் மாத்திரமன்றி ஜே.வி.பியின் தலைவர்களும் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதற்கு முக்கியமான காரணம், கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சிங்கள பௌத்த மக்களிடம் காணப்படுகின்ற செல்வாக்கு, சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம்களிடம் கிடையாது.
இன்னும் விரிவாகச் சொல்வதானால், சிறுபான்மையின மக்கள் மத்தியில் கோத்தாபய ராஜபக் ஷ அச்சத்தை ஊட்டுகின்ற ஒருவராகவே இன்னமும் இருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியமானவை. அந்த வாக்குகள் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியன.
2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததற்கும், 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதற்கும், தமிழர்களின் வாக்குகள் முக்கிய காரணமாக இருந்தன.
கோத்தாபய ராஜபக் ஷவுக்கு, தமிழ், முஸ்லிம் மக்களிடம் ஆதரவு கிடைக்காது என்பதால் தான், அவரை இலகுவாக வீழ்த்தப்படக் கூடிய வேட்பாளர் என்று ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற கட்சிகள் அடையாளப்படுத்த முனைகின்றன.
இந்தப் பலவீனத்தையும் கவனத்தில் கொண்டு தான், கூட்டு எதிரணி தனது வேட்பாளரைத் தெரிவு செய்யும். கோத்தாபய ராஜ பக் ஷ ஜனாதிபதித் தேர்தலுக்காக தன்னைத் தயார்படுத்தி வந்தாலும் இன்னமும் அது அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை.
மரபுசாரா அரசியல்வாதிகளையே மக்கள் இப்போது விரும்புகிறார்கள் என்று கோத்தாபய ராஜபக் ஷ கூறுகிறார்.
மஹிந்த ராஜபக் ஷவும் அதனை , நம்பினால், கோத்தாபய ராஜபக் ஷ களமிறங்குவது சுலபமாகி விடும்.
கூட்டு எதிரணிக்குள் பல அரசியல் தலைகள் இருந்தாலும், அவர்கள் இன்னமும் ஓர் அரசியல்வாதியாக இல்லாத கோத்தாபய ராஜபக் ஷவையே நம்பியிருக்கிறார்கள்.
கோத்தாபய ராஜபக் ஷவை விட்டால் வேறு பொருத்தமானவர் யாரும் தமது பக்கம் இல்லை என்று கூறுவதற்குக் கூட, கூட்டு எதிரணியில் உள்ள மூத்த அரசியல்வாதிகளே வெட்கப்படவில்லை.
தம்மில் உள்ள யாராலும் ஜனாதிபதி பந்தயத்தில் ஓட முடியாது என்று தீர்மானித்துத் தான், அவர்கள் வெளியே இருந்து கோத்தாபய ராஜபக் ஷ என்ற நட்சத்திர வேட்பாளரைக் கொண்டு வர முனைகிறார்கள்.
அவருக்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், அவரை முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள்.
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு அவரை வெற்றிபெற வைக்க வேண்டுமானால், அதற்காக முகம் சுழிக்க வைக்கும் உத்திகளை அவர்கள் கையாளவும் கூடும்.
அதேவேளை, கூட்டு எதிரணி சார்பில் ஒரு மரபுசாரா அரசியல்வாதியாக கோத்தாபய ராஜபக் ஷ களமிறக்கப்பட்டால், அவரைத் தோற்கடிப்பதற்கு, சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைப்பது முக்கியம்.
– ஐ.தே.க. தனியாகவும், ஜே.வி.பி. தனியாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகவும் போட்டியிட்டால், அதனைச் சாதிக்க முடியாது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளும், கோத்தாவுக்கு எதிரான வாக்குகளும் பிரிந்துபோய் விடும். அது கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியை உறுதிபடுத்தும்.
ஐ.தே.க.வின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ களமிறக்கப்பட்டால் அதனை ஜே.வி.பி. ஏற்காது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்பாது. மீண்டும் மைத்திரிபால சிறிசேனவுக்காக பிரசாரம் செய்ய ஜே.வி.பி.யோ, ஐ.தே.க.வோ தயாரில்லை.
எனவே, கட்சிகளுக்குள் இருந்து ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்வது முதல் சிக்கல். அவ்வாறு ஒருவர் தெரிவு செய்யப்பட்டாலும் கூட அவர், தமிழ், முஸ்லிம் மக்களால் ஆதரிக்கப்படும் ஒருவராக இருப்பார் என்றும் எதிர்பார்க்க முடியாது.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள், தமிழ்மக்களின் கடுமையான அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்கள், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சஜித் பிரேமதாசவும் கூட சிறுபான்மையின மக்களுக்கு நெருக்கமானவர் அல்ல.
தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில்- அதற்கான போராட்டங்கள் தொடர்பான சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
எனவே, சஜித் பிரேமதாசவை பொதுவேட்பாளராக நிறுத்தினாலும் கூட, சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்று கூற முடியாது.
இந்த தேர்தலில் இன்னொரு சிக்கலும் உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த எதிர்ப்பு அலை தமிழ் மக்களிடம் தீவிரமாக இருந்தது. அவரைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. ஆனாலும், அவருக்கு எதிராக வாக்களித்து, பழி தீர்க்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
அது மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமாக இருந்தது. மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளும், மஹிந்தவுக்கு எதிரான உணர்வுகளும், அவருக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவில் கிடைப்பதற்குக் காரணமாகியது.
ஆனால் வெற்றி பெற்ற பின்னர் அவர் அந்த நம்பிக்கையைத் தக்க வைக்கத் தவறியுள்ளார். தாம் எதிர்பார்த்து வாக்களித்து வெற்றி பெற வைத்த மைத்திரிபால சிறிசேன தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார் என்ற ஏமாற்றம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.
அதுமாத்திரமன்றி, ஜனாதிபதியாகும் எவரும், தமது வாக்குகளை பெற்றுக் கொண்ட பின்னர் ஏமாற்றி விடுவார்கள் என்ற உணர்வையும் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
இது, ஜனாதிபதித் தேர்தல் மீதான தமிழ்மக்களின் ஆர்வத்தைக் குறைக்கும். தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறையும் போது, அது கூட்டு எதிரணிக்குச் சாதகமாக மாறும்.
குறைந்தளவு தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது, அவர்கள் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கும் போது, கோத்தாபய ராஜபக் ஷவுக்கோ, அல்லது கூட்டு எதிரணி நிறுத்தக்கூடிய வேறு வேட்பாளருக்கோ வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.
எனவே, வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தும் போது, அவர் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஈர்க்கக் கூடியவராக- அவர்களின் வாக்குகளையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டும்.
தற்போது அரசியல் களத்தில் உள்ள எந்தவொருவரும், தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.
இந்த நிலையில் தான், அரசியல் கட்சிகளுக்கு வெளியே இருந்து- மரபுசாரா அரசியல்வாதி ஒருவரை உருவாக்க வேண்டிய தேவை, பொது வேட்பாளரைத் தேடும் அணியினருக்கு எழுந்துள்ளது.
பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவில் உள்ள தரப்புகளின் பின்னணியில் மேற்குலக நாடு ஒன்றின் தூதுவர் இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டு எதிரணி கோத்தாபய ராஜபக் ஷவை நிறுத்தினாலும் சரி, வேறொருவரை நிறுத்தினாலும் சரி அவரைத் தோற்கடிக்க- மேற்குலக நாடுகள் முயற்சிக்கும்.
அதற்காகவே பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஆரம்பகட்ட முயற்சி தான். ஆனால் கடைசி வரை தொடரக் கூடும்.
பொதுவேட்பாளரை நிறுத்தும் விடயத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. போன்றன இப்போதைக்கு, முழு ஈடுபாட்டைக் காண்பிக்காவிடினும், காலப்போக்கில் நிலைமைகளை உணர்ந்து படியிறங்கும் நிலை ஏற்படலாம்.
எனவே தான் அதனைப் பற்றி கவலைப்படாமல் பொதுவேட்பாளரை தெரிவு செய்யும் முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியலுக்கு அப்பால் எல்லா மக்கள் மத்தியிலும் செல்வாக்கைச் செலுத்தக் கூடியது விளையாட்டு. விளையாட்டுத் துறையில் பிரகாசித்த- சங்கக்காரவுக்கு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு இல்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் பேராதரவு உள்ளது.
அதனை முன்னிறுத்தியே அவருக்கு வலை வீசப்படுகிறது. இந்த வலையில் அவர் விழுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால் ஒன்று, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இரண்டு மரபுசார் அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டியாக இருக்காது போலவே தென்படுகிறது.
– என்.கண்ணன்