திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த பிக்குகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இரண்டு பௌத்த பிக்குகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.
பௌத்த பிக்குகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரும் தருணத்தில் குற்றவாளிக் கூண்டியில் ஏறியுள்ளனர். எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
சர்வமதத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்கள் யாராகவிருந்தாலும், அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சாலச் சிறந்ததும் அல்ல, அது மரபும் அல்ல என்ற அடிப்படையில் நீதிபதி அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்துள்ளார்.
எனினும், இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முறையாக நடைபெறும் எனவும், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.