வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும் வீடு வராததால் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் பெற்றோர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு பல இடங்களிலும் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில் இன்று மன்னார் பகுதியில் தேடுதல் நடத்தியபோது மன்னாரில் குறித்த மாணவனை கண்டதாக பலரும் தெரிவித்ததை அடுத்து, தேடுதலை தீவிரப்படுத்திய உறவினர்கள் மன்னாரில் நகர்ப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை கண்டு பிடித்துள்ளனர்.
மனரீதியிலான குழப்பம் காரணமாகவே குறித்த மாணவன் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் மன்னார் சென்றுள்ளதாகவும் அங்கு திருக்கேதீச்சரம் கோவில் உட்பட பல இடங்களுக்கும் கடந்த நான்கு நாட்களாக சென்றுள்ளதாகவும் உறவினரொருவர் தெரிவித்தார்.