சிறுமியுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகனை காலில் விலங்கிட்டு சிறை வைத்த தந்தை!!

மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கருப்பசாமி
(21) இவர் அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இருவரும் வீட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர் நேற்றைய தினம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் கருப்பசாமி மீது புகார் செய்தனர்.

அதன்பேரில் உடனடியாக விசாரணையை துவக்கியது காவல்துறை. அப்போது பெண்ணின் திருமண வயது பூர்த்தியாகாததும், அவருக்கு வயது 17 என்பதும் தெரியவந்ததையடுத்து இருவரையும் எச்சரிக்கை செய்து தனித் தனியே பெற்றோர்களிடம் ஒப்படைத்தது.

இதனையடுத்து, நேற்று இரவு மீண்டும் தன் காதலி வீட்டிற்கு சென்று கருப்பசாமி, காதலியை கூட்டிக் கொண்டு ஓட முயற்சித்தார். இதனை கருப்பசாமியின் தந்தை பார்த்துவிட்டார். அதனால், ஆத்திரடைந்த அவர் மகனை கண்டித்தார்.

ஆனால், கருப்பசாமியோ தந்தை கண்டித்ததால், அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால், தந்தை தன் மகனின் கை கால்களில் விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்தார்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது. மேலும், இதுகுறித்து கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர்  விசாரணை செய்து வருகிறார்.