அமெரிக்க பிராஜையான கோட்டாபய ராஜபக்சவினால் ஸ்ரீலங்காவின் நலன் குறித்தோ, நாட்டு மக்களின் நலன் தொடர்பிலோ உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட முடியாது என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேவேளை தானும் ஒரு இராணுவ அதிகாரியென கோட்டாபய மார் தட்டிக்கொண்டாலும் போர் தீவிரமடைந்த காலப்பகுதியிலேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றவர் நாடு மீண்டுமொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதிலிருந்து காப்பாற்ற இறுதிவரை போராடுவார் என்று எப்படி நம்ப முடியும் என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி மற்றும் வன இலாக அமைச்சர் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தத் தகவல்களை தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழும் அனைவரும் யுத்தத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்தனர். குறிப்பாக மக்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் சகலரும் யுத்தத்துடனேயே வாழ்ந்தனர். யாரும் நாட்டைவிட்டு வெளியேறிசெல்லவில்லை. இராணுவத்தில் அங்கம் வகித்த போதிலும், யுத்தம் தீவிரமடைந்த போது இராணுவத்தை கைவிட்டுவிட்டு வெளிநாடொன்றுக்கு சென்று 15 வருடங்களாக நாட்டிற்கே வராத குறிப்பாக விடுமுறைக்கே எமது நாட்டிற்கு வராதவர்தான் கோட்டாபய. அதேவேளை அமெரிக்காவின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டதுடன், பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டபோது அமெரிக்காவின் தேசியக் கொடிக்கு முன்னால் சென்று அந்த நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க ஆயுதமும் ஏந்துவேன் என்று சத்தியப்பிரமாணமும் செய்துள்ளார் கோட்டாபய.
இவ்வாறான ஒருவரால் எமது நாட்டிற்காகவும்இ நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முடியும் என்று நான் கருதவில்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்