முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – செல்வபுரம், கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் இருந்து கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் திகதி இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோது சடலத்தில் வெட்டுகாயங்களுடன் கடித்த அடையாளங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடித்து துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருக்கின்றதா? என குற்றவியல் தடுப்பு பிரிவு பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தேடியுள்ளனர்.
இதன்போது கஞ்சா போதைப்பொருள் பாவித்துவிட்டு தனது கணவர் தன்னை கடித்து துன்புறுத்துவதாக பெண் ஒருவர் செய்திருந்த முறைப்பாடு குற்றவியல் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
மேலும், குறித்த பெண்ணின் கணவரும், சடலமாக மீட்கப்பட்ட இளைஞனும் நண்பர்கள் என பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் குறித்த நபரை நேற்று கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.