துருக்கி விமான நிலைய கட்டிடத்தின் ஒருபகுதியில் இருந்து ஒரு குழந்தைக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 50 அடி உயரத்தில் இருந்து குதித்த அவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
30 வயதான ஆண்ட்ரூ வெஸ்ட்லேக் தமது மனைவி மற்றும் ஒருவயது குழந்தையுடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கே தவறுதலாக தமது பயணச்சீட்டை தொலைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்ந்து முறையிட்டும் வந்துள்ளார்.
ஆனால், அதிகாரிகளின் மெத்தனத்தால் 3 நாட்கள் பிஞ்சு குழந்தையுடன் விமான நிலையத்திலேயே தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இதனிடையே அவரது மனைவியும் குழந்தையும் அங்கிருந்து விமானம் மூலம் பிரித்தானியா திரும்ப தயாரான நிலையில், விமான ஊழியர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த விமானத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் மனம் நொந்த ஆண்ட்ரூ வெஸ்ட்லேக், தமது மனைவி மற்றும் பிஞ்சு குழந்தை முன்னிலையில் விமான நிலைய கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்திற்கு முன்னர் இதை கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும் என கூறியதாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் துருக்கி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.