தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, வழக்கறிஞர்கள் தலைமையில் சென்ற உண்மை கண்டறியும் குழுவை காவல்துறை கைதுசெய்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அதை அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ கண்டுகொள்ளவே இல்லை. அதனால், போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் மட்டுமல்லாமல், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது 40 பேர் சிகிச்சைபெற்று வருகிறார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி கலவரம் தொடர்பாகப் பல்வேறு சமூக நல அமைப்பினரும் வழக்கறிஞர் குழுவினரும் விசாரித்துவருகிறார்கள்.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் மலரவன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி கலவரம்குறித்து உண்மை கண்டறியும் குழுவாக களநிலவரம் பற்றி விசாரித்துவருகிறார்கள். தூத்துக்குடியில் விசாரணை நடத்திய அந்தக் குழுவினர், துப்பாக்கிக்குண்டுக்குப் பலியான ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசனின் வீட்டிற்குச் சென்று, நடந்த சம்பவங்கள்குறித்துக் கேட்டறிந்தார்கள். அப்போது அங்கு சென்ற போலீஸார், உண்மை கண்டறியும் குழுவினரைத் தாக்கியதுடன், அவர்களைக் கைதுசெய்தார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மலரவன், ’’மக்கள் உரிமைக் கழகம் சார்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசிவருகிறோம். நேற்றிரவு வழக்கறிஞர் சரவணன், சட்டக் கல்லூரி மாணவர்கள் கணேஷ்குமார், முனியசாமி, புதியம்புத்தூரைச் சேர்ந்த நன்னிபெருமாள், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவேந்தன், சமயன், முருகன் ஆகியோர், ராமச்சந்திரபுரத்தில் தமிழரசனின் குடும்பத்தினரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சென்ற புதியம்புத்தூர் காவல்துறையினர், அவர்களை அவதூறாகப் பேசியதுடன், அடித்து உதைத்து வேனில் ஏற்றிச் சென்றுள்ளார்கள். பின்னர், காவல்நிலையத்திலும் அவர்களைத் துன்புறுத்திய போலீஸார், அனைவரையும் கைதுசெய்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் காவல்துறையினர் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள்; அப்பாவி மக்களை போலீஸார் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்; நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களை அடித்து இழுத்துச்சென்று பொய் வழக்குப் போடும் அவலமும் நடக்கிறது.
உண்மை கண்டறியும் குழுவினரையே கைதுசெய்யும் அளவுக்கு அராஜகம் நடக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்குமாறு உறவினர்களை போலீஸார் நிர்ப்பந்திக்கிறார்கள். அதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் வழக்கறிஞர்கள், சமூக அமைப்பினர்மீதும் போலீஸார் ஆத்திரம் அடைந்து அடித்து உதைக்கிறார்கள். போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையால், தூத்துக்குடி மக்களிடம் பதற்றம் கூடியிருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலைமை’’ என்றார்.