சமுர்த்தி வங்கிகளில் சிறந்த தொழில்பாட்டு வங்கிகள் தேர்வில் முதல் 10 இடங்களிற்குள் மூன்று இடங்களை யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுக்கொண்டமைக்கான விருதுகள் நேற்றைய தினம் மாவட்டச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.இலங்கையில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளின் தொழிற்படு திறன், முகாமைத்துவ நிர்வாகம், கணக்கியல், வாடிக்கையாளர் நலன் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் சிறந்த வங்கிகள் தேர்வு செய்யப்பட்டது.இதில் இலங்கையில் உள்ள அனைத்து சமுர்த்தி வங்கிகளிலும் சிறந்த வங்கியாக இணுவில் வங்கி முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இதேபோன்று இரண்டாம் இடத்தினை சுன்னாகம் வங்கி பெற்றுக்கொண்டது.
இதேநேரம் தெல்லிப்பளை சமுர்த்தி வங்கி 6வது இடத்தினைப் பிடித்தது. இவற்றின் அடிப்படையில் இலங்கையில் உள்ள 1074 வங்கிகளில் முதல் 10 இடங்களில் உள்ள வங்கிகளில் மூன்று வங்கிகள் யாழ்ப்பாணத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் நாடு முழுவதும் உள்ள 1074 வங்கிகளில் 72 வங்கிகள் ஏ தர வங்கிகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு தரமுயர்த்தப்பட்ட 72 வங்கிகளில் 19 வங்கிகள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே உள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையில் 5 ஏ தர சமுர்த்தி வங்கிகள் மட்டுமே இருந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதிமுதல் 19 ஏ தர வங்கிகள் உள்ளன.
இவற்றிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது. அவர்களிற்கான விருதினை நிதியமைச்சர் மங்கள சமரவீர வழங்கிவைத்தார்.