உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியர்களின் விருந்தோம்பலில் பிரதான இடம் வாழையிலையில் உணவு பரிமாறும் பாரம்பரியம என்பது நமது பெருமைக்குரிய கலாச்சாரம்.
நாம் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்பவரை, நாம் கௌரவிப்பது என்பது நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை, அதனுடன் அன்பும் கலந்து வாழையிலையில் படைக்கும் விருந்து பறைசாற்றும்.
திருமண விழாவின் கதாநாயகனான மாப்பிள்ளைக்கு அளிக்கும் தலைவாழை இலை விருந்தும் அதில் துலங்கும் பெண் வீட்டாரின் மரியாதையும், அன்பும், கவனிப்பும்.
வாழையிலையில் உணவு பதார்த்தங்களை பரிமாறும் விதமே அழகென்றால், அந்த பதார்த்தங்களுக்கென்று பிரத்யேக இடமும் அதன் பொருளும் சிறப்பு.
வாழையிலையை கழுவி, கிழிசல் களை சீர்படுத்தி விருந்துக்கேற்றவற்றை வகைப்பிரிப்பர். வாழையிலையில் சூடான மணக்கும் சோறு அதன் மீது ருசிக்கும் சாறு, இன்னபிற பக்கவாத்தியங்கள் வகைக்கு ஒன்றாக, ஒரு நல்ல விருந்து உண்டவன் மனதை பரவசத்தில் ஆழ்த்தும், அந்த நேரத்தில் அவன் வாழ்த்தும் மனமார்ந்ததாக தானே இருக்கும்.
வாழையிலையில் உள்ள பச்சையம் அதாவது குளோரோபில், சுடு சாதத்தில் கலந்து பிரத்யேக மணம் தரும் உணவிற்கு.
தமிழர்களின் விருந்துகளில் தவறாமல் இடம் பெறும் உணவு வகைகளை நம் வாழ்வோடு தொடர்புபடுத்தி பார்ப்போமா? காசா? பணமா? நம் முன்னோர்கள் கூறியது எத்தனை பாந்தமாக ஒத்திருக்கிறது பாருங்களேன்!
கூட்டு, பொரியல், அவியல், பச்சடி, ஊறுகாய் மனித வாழ்வின் இளமைக் காலத்தின் பல்வேறு நிலைகளை குறிக்கிறது.
குழம்பு: இளமைப் பருவம் என்றாலே குழப்பம் தானே.
ரசம்: குழம்பி தெளிவாகும் நடுத்தர வயது. கலக்கி, தெளிவா ஊற்று ரசத்தை என்று தானே கூறுவார்கள்.
மோர்: பால் தன்னிடம் உள்ள அனைத்தையுமே வெவ்வேறு விதமாக வழங்கி, இனி என்னிடம் எதுவும் இல்லை என்பதே மோர். குடும்பத்தை முன்னேற்றும் கணவன் மனைவியின் நிலை.
பாயாசம்: எல்லாம் கடந்து இறைவனின் திருவடிக்காக காத்திருப்பு. அந்த இனிப்பே நிறைவு.
இலையே இறுதியில் மட்கி உரமாகிறது. மனித பூத உடலும் மண்ணோடு மண்ணாகிறது.