திருப்பூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக வாலிபர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
திருப்பூரில் வசிக்கும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே – 29-ம் தேதியன்று காணாமல்போனார். எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், காணாமல்போன மாணவி திருச்சி மாவட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து திருச்சிக்குச் சென்ற திருப்பூர் காவல்துறையினர், அந்த மாணவியை மீட்டு, திருப்பூருக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அதில், திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி நாகராஜ் என்பவர் அந்த மாணவியைக் காதலித்துவந்தது தெரியவந்திருக்கிறது.
கடந்த 29-ம் தேதியன்று, மாணவியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரம் பார்த்து, பைக்கில் அங்கு சென்ற நாகராஜ், மாணவியிடம் ஆசைவார்த்தைகளைப் பேசி, அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு காங்கேயத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, அவரது நண்பர்களான ஜீவா, மணிகண்டன் மற்றும் 17 வயது நிரம்பிய ஒரு சிறுவன் ஆகியோரின் உதவியுடன் மாணவியை ஆட்டோவில் ஏற்றி திருச்சிக்கு கூட்டிச்சென்றிருக்கிறார்கள். திருச்சியில் வைத்து நாகராஜ் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகராஜுக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். அந்த நால்வரின் மீதும் “போக்ஸோ” சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதில் மூவரை கோவை மத்திய சிறையிலும், 17 வயதான சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் தற்போது அடைத்திருக்கிறார்கள்.