இசைஞானி இளையராஜாவுக்கு, `இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்’ எனப் புகழ்பாடி, தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ந்துள்ளார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இசையமைப்பாளர் இளையராஜா, இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். தமிழில் கடந்த 1976-ம் ஆண்டில் வெளிவந்த ‘அன்னக்கிளி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்துக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைத் துறையில் அசைக்க முடியாத உச்சத்தில் மகுடம் சூட்டிக்கொண்ட இவருக்கு, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருது, பத்மபூஷண் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் தனது வாழ்த்துச் செய்தியை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதில், மிகவும் ஹைலைட்டான விஷயம், தமிழில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருப்பதுதான்.
அவர் பதிவிட்ட ட்வீட்டில், ` இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னிகரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டு தொடக்கத்தில், அன்னாருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன்’ என்று பதிவிட்டு, இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.