‘அக்னி ஐந்து’ ஏவுகணை பரிசோதனையில் வெற்றி

ஐயாயிரம் கிலோ  மீற்றர் வரை சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘அக்னி ஐந்து’ ஏவுகணையை  இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது இதற்கு முன்னரும் ஐந்து தடவை வெற்றிகரமாக பரி‍சோதனை செய்து பார்க்கப்பட்டு, தற்போது ஆறாவது முறையாகவும் ஒடிசாவின் அப்துல் காலம் தீவிலுள்ள நான்காவது தளத்திலிருந்து ஏவப்பட்டது.

இது குறித்து இந்தியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,

‘அக்னி-5’ ஏவுகணை ஏவப்பட்டதும், அதை ராடர் மூலம் கண்காணிக்கப்பட்டு, செல்லும் இடங்கள் அனைத்தும் சரியானதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மற்ற ஏவுகணைகளைப்போல் அல்லாமல் அக்னி-5 ஏவுகணை மிகவும் நவீன தொழில்நுட்பத்தில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது.

ஏவுகணை செல்லுமிடத்தை அதிக நுண்ணறிவுத் திறனுடன் கண்காணித்தல், லேசர் தொழில்நுட்பம், இலக்கை துல்லியமாகத் தாக்கச் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை இந்த ஏவுகணையில் இடம் பெற்றுள்ளன என்றனர்.